பொன்னை ஆற்றில் விடப்படும் தொழிற்சாலைக் கழிவுநீர்: குடிநீர் நஞ்சாகும் அபாயம்

பொன்னை ஆற்றில் விடப்படும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுநீரால் குடிநீர் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொன்னை ஆற்றில் விடப்படும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுநீரால் குடிநீர் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தின் வற்றாத ஜீவ நதியாக பாய்ந்தோடி வளம் சேர்த்த நீவா நதி எனும் பொன்னை ஆறு புராணப் பெருமை கொண்டதாகும். இந்த ஆறு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாச்சல வனப்பகுதியில் உற்பத்தியாகி, 83 கி.மீ. வரை பாய்ந்து, வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் ஆந்திர மாநில எல்லையான பொன்னை அருகே தமிழகத்தில் நுழைந்து திருவலம் வழியாக மேல்விஷாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது.
பொன்னை ஆற்றின் குறுக்கே மேல்பாடி அருகே 1855-ஆம் ஆண்டு 216.50 மீ நீளம், 21.25 அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இதன் மூலம் நீர் தேக்கப்பட்டு கிழக்கு, மேற்கு, தெற்கு என 3 பிரதான கால்வாய்கள் மூலம் வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த 129 ஏரிகள் நீர்வளம் பெற்று வருகின்றன. இதில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 122 ஏரிகள் நீர்வளம் பெற்று 8,840.15 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதனால், பொன்னை ஆற்றுப்படுகை முழுவதும் இருந்த விளைநிலங்கள் செழித்து காணப்பட்டன. மேலும், ஆற்றில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருந்த காரணத்தால், ஆற்றைக் கடக்க முடியாத நிலையில் திருவலத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இரும்பாலான மேம்பாலம் கட்டப்பட்டது. அப்போது ஆற்றின் இரு கரைகளின் ஓரங்களில் ஆங்காங்கே சிறு கால்வாய்கள் அமைக்கப்பட்டு, ஆற்று நீர் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. 
இந்நிலையில் மழை அளவு குறைந்ததன் காரணமாக பொன்னை ஆறு 30 ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது. மேலும், ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டியுள்ளதால் நீர்வரத்து முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொன்னை ஆற்றுப்படுகை முழுவதும் உள்ள விளைநிலங்கள் விவசாயம் இன்றி தரிசானது. 
இந்நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொன்னை ஆற்றில் விடப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ராணிப்பேட்டையைச் சுற்றிலும் உள்ள சில தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும்  பல ஆயிரம் லிட்டர் ரசாயன நச்சுக் கழிவுநீரை சிலர் இரவு நேரங்களில் டேங்கர் லாரிகளில் நிரப்பி, பள்ளேரி-வசூர் கிராமங்களுக்கு இடையே சாலையோரங்களில் நிறுத்தி, பொன்னை ஆற்றில் விட்டுச் செல்கின்றனர்.
இந்த ரசாயன நச்சுக் கழிவுநீர் நேரடியாக ஆற்று நீரில் கலக்கிறது. மேலும், ஆற்று வழித் தடத்தில் இருந்த புல், பூண்டு, மரம் செடிகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக ஆற்றுநீர் விஷமாக மாறி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆற்றுப்படுகையை நம்பியுள்ள கிராம மக்களின் குடிநீர் ஆதாரமும், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்களும், கால்நடைகளின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், பொதுப் பணித் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை இணைந்து பொன்னை ஆற்றில் ரசாயன  நச்சுக்  கழிவுநீரை விடுவோர் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com