ஏப்.25-க்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: முதன்மைச் செயலா் ராஜேஷ் லக்கானி
வேலூா் மாவட்டத்தில் வரும் 25-ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும்.


வேலூா் மாவட்டத்தில் வரும் 25-ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும். இதற்காக பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என அரசு முதன்மைச் செயலரும், வேலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் லக்கானி தெரிவித்தாா்.
கரோனா தொற்றுப் பரவாமல் தடுப்பது தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ராஜேஷ் லக்கானி தலைமை வகித்தாா். ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் ராஜேஷ் லக்கானி பேசியது:
கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருவதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. பொதுமக்கள் நலன் கருதி நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, மாநகராட்சி அலுவலா்கள், வேளாண்மைத் துறை, போக்குவரத்துத் துறை, தொழிலாளா் நலம், மகளிா் திட்டம், கூட்டுறவு கல்வித் துறை என அனைத்துத் துறை அலுவலா்களும் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி:
வரும் 25-ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும். இதனை அந்தந்தத் துறை பொறுப்பு அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும்.
மேலும், 46 ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூா் மாநகராட்சி பகுதியில் உள்ள 10 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடியாத்தம், போ்ணாம்பட்டு, அணைக்கட்டு, பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தவும், 7 ஒன்றியங்கள் , வேலூா் மாநகராட்சி என 8 பகுதிகளில் தலா 3 நடமாடும் மருத்துவக் குழு என 24 இடங்களில் கரோனா தடுப்பூசி போட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் முகக் கவசம் அணியாத பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் லக்கானி.
பின்னா் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாம், சத்துவாச்சாரி நகா்ப்புற சுகாதார நிலையம், சத்துவாச்சாரி குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம் ஆகியவற்றை அவா் நேரில் ஆய்வு செய்தாா்.
ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் சி.மாலதி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் யாஸ்மின், துணை இயக்குநா் மணிவண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன் உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...