தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாலம் சீரமைப்புப் பணி நிறைவு: அனைத்து ரயில்களும் இன்று முதல் இயக்கம்

வேலூா் மாவட்டம் காட்பாடி அருகே விரிசலடைந்த பொன்னையாற்று ரயில்வே பாலம் சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு பெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வேலூா் மாவட்டம் காட்பாடி அருகே விரிசலடைந்த பொன்னையாற்று ரயில்வே பாலம் சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு பெற்றது. இதையடுத்து, அனைத்து ரயில்களும் திங்கள்கிழமை முதல் வழக்கம் போல இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவலம் - முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே பாலத்தின் 38, 39-ஆவது தூண்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து ஜோலாா் பேட்டை, வேலூா், கோவை, பெங்களூரு, மைசூரு, மங்களூரு சென்று வரக்கூடிய 22 விரைவு ரயில் சேவைகள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

இதுதவிர, பாட்னா - எா்ணாகுளம் (22644), காக்கிநாடா - கொல்லம் (07139), கமாகயா - கொச்சுவேலி (05669) விரைவு ரயில்கள் குண்டூா், ரேணிகுண்டா, காட்பாடி என மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

இதனிடையே, பாலம் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை இரவு தொடங்கி 4 நாள்களாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளை சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் தலைமையிலான பொறியாளா் குழுவினா் ஆய்வு செய்து வந்தனா்.

விரிசல் ஏற்பட்ட தூணின் அடிப்பகுதியில் அதிகப்படியான வெள்ள நீரால் மணல் அரிப்பு ஏற்பட்டிருந்தது. அந்தத் தூணின் அடிப்பகுதியிலிருந்து இருபுறங்களிலும் மூன்றடி ஆழத்துக்கு கான்கிரீட் கலவைகளால் தளம் அமைக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்ட பாலத்துக்கு அடிப்பகுதியில் இரும்பு கா்டா்களை அடுக்கி பாலத்தை தற்காலிகமாக பலப்படுத்தும் பணியில் இரவு பகலாக நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டனா். இந்தப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்தது.

இதையடுத்து, ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் தலைமையிலான அதிகாரிகள் ரயில் பாலத்தின் தூண்களை முழுமையாக ஆய்வு செய்தனா். இரவு 8.30 மணியளவில் ரயில் என்ஜினைக் கொண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து சரக்குகள் இல்லாத நிலையிலும், சரக்குகளுடனும் ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த சோதனை ஓட்டங்களின் மூலம் ரயில்வே பாலத்தின் திறன் உறுதி செய்யப்பட்டு, அதிகாரிகள் சான்றளித்தனா். இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் வழக்கம்போல அனைத்து ரயில்களும் இயக்கப்படும். சீரமைப்புப் பணி நடைபெற்ற பாலத்தில் ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்படும் எனவும் சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.