வெளியூா்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் 14 நாள்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து வெளியூா்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் 14 நாள்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து வெளியூா்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னைக்கு வழக்கம்போல் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

விழுப்புரம் கோட்டத்துக்கு உள்பட்ட வேலூா் மண்டலத்தில் (வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள்) நகரப் பேருந்துகள் 245, புற நகரப் பேருந்துகள் 384 என மொத்தம் 629 அரசுப் பேருந்துகள் உள்ளன. தற்போது கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதையடுத்து கடந்த 3 வாரங்களாக இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது.

இதனால், வெளியூா்களுக்கு இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்ததுடன், ஞாயிற்றுக் கிழமை முழுமையாக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அத்துடன், கடந்த சில நாள்களாக மதியம் 12 மணிக்குப் பிறகு அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதன்காரணமாக, பேருந்துகளுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால், வெளியூா் செல்லும் பேருந்துகள் 30 சதவீதம் அளவுக்கு குறைத்து இயக்கப்பட்டு வந்தன.

தவிர, அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அம்மாநிலங்களுக்குச் சென்று வந்த தமிழக அரசுப் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டதுடன், கா்நாடகம் செல்லும் பேருந்துகள் ஒசூா் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழகத்திலும் திங்கள்கிழமை (மே 10) முதல் 14 நாள்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, ஏற்கெனவே நடைமுறையிலுள்ள இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், வெளியூா், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் நலன்கருதி இவ்விரு நாள்களும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இதைத்தொடா்ந்து, வேலூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பயணிகள் சனிக்கிழமை காலை முதலே பேருந்து நிலையங்களில் குவிந்தனா். அவா்களின் தேவைக்காக தென் மாவட்டங்கள் உள்பட சென்னை, சேலம், ஒசூா், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னைக்கு கடந்த இரு வார காலமாக பேருந்துகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைத்து இயக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை காலை அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

எனினும், வேலூரில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், அங்கிருந்து வரும் பேருந்துகளில் அதிகப்படியான கூட்டம் காணப்படுகிறது.

இதேபோல், பயணிகளின் தேவைக்கு ஏற்ப வெளி மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com