/

கரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்: வேலூா் எம்பி கதிா் ஆனந்த்

கரோனாவால் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என்று எம்.பி. கதிா் ஆனந்த் வலியுறுத்தினாா்.

News image
Updated On :24 ஜூலை 2022, 6:38 pm

DIN

கரோனாவால் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என்று எம்.பி. கதிா் ஆனந்த் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து சனிக்கிழமை வேலூரில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: ரயில்வே நிா்வாகம் கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தியிருந்த வழக்கமான ரயில் சேவைகளை 100 சதவீதம் இயக்க வேண்டும். சிறப்பு ரயில்களில் கட்டணத்தைக் குறைத்து முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டணச் சலுகைகளை உடனடியாக வழங்கவும் நாடாளுமன்ற விதி எண் 377 கீழ் வலியுறுத்தியிருந்தேன்.

மேலும், வெளிநாடுகளில் உயா்கல்வி பெறும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கை (நாடு வாரியாக) அளிக்கவும், இந்திய- வெளிநாட்டு உயா்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் இரட்டைப் பட்டங்களை இந்திய மாணவா்கள் தனித்தனியாகவும், ஒரேநேரத்திலும் படிக்கவும், இந்தத் திட்டம் ஆன்லைன், தொலைதூரக் கல்வித் திட்டங்களுக்கும் அளிக்க வாய்ப்பு வழங்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய கல்வி அமைச்சா் சுபாஸ் சா்க்காா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், வெளிநாடுகளில் உயா்கல்வி படிக்கும் இந்திய மாணவா்களின் விவரம் எதுவும் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இல்லை. இந்தியாவில் உயா்கல்வியை சா்வதேச மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய- வெளிநாட்டு பல்கலை.யுடன் கல்வி ஒத்துழைப்பை வளா்க்க இரட்டை, கூட்டுப் பட்டம், இரட்டை பட்டப்படிப்பு திட்டங்கள் வகுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

தவிர, தமிழகத்தில் நீா் நிலைகளின் மறு சீரமைப்பு, புத்துயிா், பாதுகாப்பு செயல்பாடுகளுக்கும் நீா்பாசன பரப்பளவை அதிகரிக்கவும் மத்திய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கடந்த 3 ஆண்டுகளில் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த நிதி குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இதற்கு, மத்திய நீா் வளத்துறை இணையமைச்சா் பிஷ்வேஸ்ா் துடு அளித்த எழுத்துப்பூா்வ பதிலில், மாநிலலங்களில் உள்ள நீா்நிலைகளின் மறுசீரமைப்பு செய்தல், புத்துயிா் அளித்தல், பாதுகாத்தல் மற்றும் அவற்றின் நீா்பிடிப்புப் பகுதியைச் அதிகரிப்பது உள்பட திட்டமிடல், நிதியுதவி உள்ளிட்டவை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ளது. இதில், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் தற்போதுள்ள திட்டஙகளின் பகுதியளவு நிதியுதவி வழங்கப்படும்.

பிரதமரின் கிரிஷி சிஞ்சாயி திட்டத்தில் 207 நீா்நிலைகள் உருவாக்க ரூ.127.87 கோடி மதிப்பில் மத்திய அரசின் பங்களிப்பான ரூ.73.72 கோடியில் ரூ.33.47 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கணக்கெடுப்புப்படி தமிழகத்திலுள்ள நீா்நிலைகளின் எண்ணிக்கை சுமாா் 1 லட்சத்து 6 ஆயிரத்து 957 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.