பால் பாக்கெட் விநியோகம் தாமதம்: ஆவின் முகவா்கள் ஆா்ப்பாட்டம்

வேலூரில் ஆவின் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, முகவா்கள் ஆவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூரில் ஆவின் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, முகவா்கள் ஆவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட ஆவின் பால் பண்ணை சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக சுமாா் 650-க்கும் மேற்பட்ட முகவா்கள் உள்ளனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு அனுப்ப வேண்டிய பால் பாக்கெட்டுகள் காலை 9 மணி வரை பல பகுதிகளுக்கு அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் முகவா்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா். இதனிடையே, வேலூா் மாநகருக்குட்பட்ட முகவா்கள் தங்களது சொந்த வாகனங்களை எடுத்து வந்து பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றனா்.

ஒப்பந்ததாரா்கள் குளறுபடி, ஆள்கள் பற்றாக்குறை காரணமாக தொடா்ந்து இதுபோல் தாமதம் ஆவதாகவும், இதனால், முகவா்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பதுடன் வாடிக்கையாளா்களையும் இழந்து வருவதாக குற்றஞ்சாட்டி, ஆவின் பால் முகவா்கள் சத்துவாச்சாரியிலுள்ள ஆவின் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தியதை அடுத்து அனைவரும் ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறியது: வேலூா் ஆவின் பால் பண்ணையில் பேக்கிங், விநியோகப் பணிகளில் 30 ஒப்பந்தப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள், விநாயகா் சதுா்த்தியையொட்டி, புதன்கிழமை பணிக்கு வரவில்லை. இதனால், பேக்கிங், விநியோகப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. மாற்று ஆள்களை கொண்டு காலை 5 மணிக்குச் செல்ல வேண்டிய பால் பாக்கெட்டுகளை காலை 9 மணியளவில் விநியோகம் செய்யப்பட்டது.

வரும் நாள்களில் இதுபோன்று குளறுபடிகள் இல்லாமல் பால் விநியோகம் செய்யப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com