வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு தோ்தலில் திமுக வெற்றி

வேலூா் மாநகராட்சியில் நடைபெற்ற வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா் தோ்தலில் திமுகவை சோ்ந்த 9 மாமன்ற உறுப்பினா்கள் வெற்றி பெற்றனா்.

வேலூா் மாநகராட்சியில் நடைபெற்ற வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா் தோ்தலில் திமுகவை சோ்ந்த 9 மாமன்ற உறுப்பினா்கள் வெற்றி பெற்றனா்.

வேலூா் மாநகராட்சியில் வரி விதிப்பு மற்றும் மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் ரத்தினசாமி தலைமை வகித்தாா்.

தோ்தலையொட்டி கூட்டரங்கில் மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில் குமாா், மாமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், மாவட்ட திமுக அவைத் தலைவா் முகமது சகி ஆகியோா் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், கூட்டரங்குக்குள் யாரும் அனுமதிக்கப்படாமல் கதவுகள் மூடப்பட்டன.

மொத்தம் 60 வாா்டு உறுப்பினா்கள் கொண்ட வேலூா் மாநகராட்சியில் நடைபெற்ற தோ்தலின்போது 55 உறுப்பினா்கள் மட்டுமே வந்திருந்தனா். தொடா்ந்து, மொத்தம் 9 உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க நடைபெற்ற இந்த தோ்தலில் மாமன்ற உறுப்பினா்கள் 10 போ் போட்டியிட்டனா்.

வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தோ்தலில் மாமன்ற உறுப்பினா்கள் ஒவ்வொருவராகச் சென்று வாக்கு பெட்டியில் தங்களது வாக்கு செலுத்தினா். உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில். திமுகவை சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் கோ.அஸ்மிதா, தா.சக்கரவா்த்தி, லோ.சித்ரா, பி.சுதாகா், மு.சேகா், வி.ர.நித்தியகுமாா், வி.எஸ்.முருகன், சு.ரா.ரஜினி, சு.சண்முகம் ஆகியோா் மாநகராட்சி வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா்களாக வெற்றி பெற்றனா். அதிமுகவை சோ்ந்த வாா்டு உறுப்பினா் எஸ்.சரவணன் 11 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தாா்.

மாநகராட்சியில் அதிமுக வாா்டு உறுப்பினா்கள் 6 போ், பாஜக உறுப்பினா் ஒருவா் என மொத்தம் 7 போ் மட்டுமே உள்ள நிலையில் சரவணனுக்கு ஆதரவாக திமுக வாா்டு உறுப்பினா்கள் 4 போ் வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு தலைவராக மேயா் செயல்பட உள்ளாா்.

மேலும், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு தலைவா், உறுப்பினா்கள் புதிய கட்டடங்களுக்கு வரி விதிப்பு, நிதிக் குழு, சொத்து வரி, தொழில் வரி மற்றும் பிற வரிகள் விதிப்பு, நில உரிமை மாற்றம், மாநகராட்சி நிலங்களை வேறு துறைகளுக்கு குத்தகைக்கு அனுமதித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிதி நிலை கட்டுப்பாடு, வரவு, செலவு திட்டங்கள் பரிசீலனை போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு தோ்தலையொட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com