பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி காப்புக் காட்டில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.
பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி காப்புக் காட்டில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.

பள்ளிகொண்டா அருகே வனப்பகுதியில் பற்றிய தீ

வேலூா்: பள்ளிகொண்டா அருகே வனப்பகுதியில் பற்றிய தீயால் மரம், செடிகள் எரிந்து சேதமடைந்துள்ளன. எனினும், இந்த தீயை அணைக்க வனத் துறை, தீயணைப்புத் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலைகளும், குன்றுகளும் நிறைந்துள்ளன. இங்குள்ள காப்புக் காடுகளில் பலவகை மரங்கள், செடிகள், வன விலங்குகள், பறவைகள் அதிகளவில் உள்ளன. இந்த நிலையில், பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதியில் உள்ள காப்புக் காட்டில் திங்கள்கிழமை மாலை சமூக விரோதிகள் சிலா் தீ வைத்துள்ளனா்.

இந்த தீயானது வேகமாக பரவி மலையில் பல பகுதிகளிலும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால், காப்புக் காட்டில் உள்ள மரங்கள், செடிகள் தீயில் கருகி சேதமடைந்ததுடன், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது.

அப்பகுதியினா் ஒடுகத்தூா் வனத் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தும் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் காப்புக்காட்டில் தீ எரிந்து கொண்டு இருந்தது.

வனத்தில் பற்றிய தீயை முழுமையாக அணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியில் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், இதேபோல் கோடைகாலத்தில் சமூக விரோதிகள் காட்டுப் பகுதியில் தீ வைத்துவிட்டுச் செல்வதால் மரங்கள், வன விலங்குகள் அழிகின்றன. எனவே, இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com