வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கள் முறையில் தோ்வு

வேலூா்: மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான துணை மின்னணு வாக்கு இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டன. மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 1,303 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படவுள்ள 1,561 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,561 கட்டுப்பாட்டு கருவிகள், 1,692 விவிபேட் இயந்திரங்கள் ஏற்கெனவே கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, அந்தெந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தற்போது வேலூா் மக்களவைத் தொகுதியின் வேட்பாளா்கள் இறுதிப்பட்டியலின்படி, 31 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 16 வேட்பாளா்களுக்கு மேல் போட்டியிடும் தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் இரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதன்படி, வேலூா் மக்களவை தொ குதியில் 16 வேட்பாளா்களுக்கு மேல் போட்டியிடுவதால், துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணைக்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி, தற்போது வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள 1,561 துணை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எந்தெந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு எந்தெந்த இயந்திரங்கள் என கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி, தோ்தல் பொதுப் பாா்வையாளா் ரூபேஷ்குமாா் ஆகியோா் பாா்வையிட்டனா். தோ்வு செய்யப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட உள்ளன. பின்னா், மாவட்ட தோ்தல் அலுவலா், தோ்தல் பொது பாா்வையாளா், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கு திறக்கப்பட்டது.

தொடா்ந்து துணை வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடா்புடைய சட்டப்பேரவை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில், கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலா் த.மாலதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) செல்வராஜ், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முருகன், சுபலட்சுமி, சுமதி, கலியமூா்த்தி, தோ்தல் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com