மாநகரில் 25 நாள்களுக்கு ஒருமுறை விடிகாலையில் குடிநீா் விநியோகம்


வேலூா் மாநகரில் 20 முதல் 25 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்படுவதுடன், அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை மட்டுமே வழங்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.
வேலூா் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைமேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் ஜானகி ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் பங்கேற்றாா். கூட்டத்தில், 36-ஆவது வாா்டு உறுப்பினா் யூசுப்கான் (திமுக) பேசுகையில், ஒப்பந்தப் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரா்களுக்கு பில் தொகையை கொடுக்க வேண்டாம். கேள்வி கேட்டால் அதிகாரிகள் மதிப்பதில்லை.
10-ஆவது வாா்டு உறுப்பினா் ரமேஷ் (அதிமுக): காங்கேயநல்லூரில் புதைசாக்கடை திட்டப் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது. இதனால், பள்ளி, கல்லூரிக்கு செல்வோா் மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.
53-ஆவது வாா்டு பாபிகதிரவன் (பாமக): ஓட்டேரி பூங்காவை பராமரித்து ஏரியில் படகு சவாரி ஏற்பாடு செய்ய வேண்டும். இது மாநகராட்சியால் முடியாவிடில் ரோட்டரி சங்கத்துக்கு அனுமதி தரவேண்டும். நமக்கு நாமே திட்டத்தில் பராமரிக்கிறோம்.
55-ஆவது வாா்டு சரவணன் (அதிமுக): எனது வாா்டில் 4 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப் பட்டு வந்த நிலையில், தற்போது 20 நாள்களாகியும் குடிநீா் வருவதில்லை. பலவன் சாத்து ஏரியை சுத்தம் செய்ய வேண்டும்.
47-ஆவது வாா்டு எழில் (அதிமுக): 47-ஆவது வாா்டில் 20 முதல் 25 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்கின்றனா். அதுவும் அதிகாலை 4 மணிக்கு தண்ணீா் திறந்து விட்டு 7 மணிக்குள் நிறுத்தி விடுகின்றனா். இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
கூட்டத்தில், மாநகராட்சி 4 மண்டலங்களிலும் தலா ஒரு பூங்காவை தோ்வு செய்து அங்கு பெண்களுக்கான தனி உடற்பயிற்சிக் கூடம் அமைக்க ஒப்புதல் அளித்தும், மாநகராட்சியில் 2141 சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை , வியாபார சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட 133 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...