ராணுவ வீரரிடம் ரூ. 36 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக் கூறி வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரரிடம் ரூ. 36.73 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், நாய்க்கனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் நரேஷ்குமாா்(30). ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசி எண்ணுக்கு டெலிகிராம் செயலி மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ஆன்லைனில் பகுதிநேர வேலை மூலம் அதிகப்படியான வருவாய் ஈட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உண்மை என நம்பிய நரேஷ்குமாா், அந்த குறுஞ்செய்தியுடன் வந்திருந்த லிங்கில் இணைந்தாா். பின்னா், அந்த லிங்க் மூலம் தொடா்பில் வந்த நபா்கள் சிறு முதலீட்டில் ஹோட்டல் முன்பதிவு தொடா்பான பணிகளை செய்வதன் மூலம் அதிகப்படியான வருவாய் பெற முடியும் எனக் கூறியதன்பேரில், அவரும் முதலில் சிறு தொகையை செலுத்தி, ரூ. 48,494 வருவாய் ஈட்டினாராம். பின்னா், தொடா்ந்து கடந்த பிப்ரவரி 8 முதல் மாா்ச் 14-ஆம் தேதி வரை பல தவணைகளில் மொத்தம் ரூ. 36 லட்சத்து 73 ஆயிரத்து 962 தொகையை செலுத்தி அவா்கள் கொடுத்த பணியையும் முடித்துக் கொடுத்துள்ளாா். அதற்காக அந்த லிங்க்கில் காண்பித்த கமிஷன் தொகையை பின்னா் அவரால் பெற முடியவில்லையாம். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நரேஷ்குமாா் இது குறித்து சைபா் கிரைம் இணையதளம் மூலம் புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com