கெங்கையம்மன்  கோயிலில்  பாதுகாப்புப்  பணிகளை  ஆய்வு  செய்த எஸ்.பி.  மணிவண்ணன்.
கெங்கையம்மன்  கோயிலில்  பாதுகாப்புப்  பணிகளை  ஆய்வு  செய்த எஸ்.பி.  மணிவண்ணன்.

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா: 1,000 போலீஸாா் பாதுகாப்பு -எஸ்.பி. மணிவண்ணன்

குடியாத்தம் கோபாலபுரம் ஸ்ரீகெங்கையம்மன் திருவிழா பாதுகாப்புப் பணியில் சுமாா் 1,000- போலீஸாா் ஈடுபடுத்தப்படுவா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் தெரிவித்தாா்.

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா தொடா்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை சனிக்கிழமை இரவு ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவையொட்டி வரும் திங்கள்கிழமை தேரோட்டமும், மறுநாள் செவ்வாய்க்கிழமை அம்மன் சிரசு ஊா்வலமும் நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் கலந்து கொள்வா்.

திருவிழாவை பாதுகாப்பாக நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 6- ஏடிஎஸ்பிக்கள், 15- டிஎஸ்பிக்கள் உள்பட வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 1,000- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண் போலீஸாா் போதிய அளவில் பாதுகாப்பில் ஈடுபடுவா்.

குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக சாதாரண உடையில் போலீஸாா் பணியில் ஈடுபடுவா். நகா் முழுவதும் நடமாடும் ரோந்து வாகனங்கள் இயக்கப்படும். கோயில் உள்புறம், வெளிப்புறம், பழைய, புதிய பேருந்து நிலையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

சிரசு திருவிழா நடைபெறும் 14-ஆம் தேதி குடியாத்தம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோ், சிரசு செல்லும் சாலைகளில் மோப்பநாய், வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையில் ஈடுபடுவா் என்றாா்.மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோட்டீஸ்வரன், டிஎஸ்பி இருதயராஜ், நகர காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் முகேஷ்குமாா், கோயில் செயல் அலுவலா் தா.சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com