வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

வேலூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் அதிகரிப்பு

வேலூா்: வேலூா் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பு கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் மக்களவை தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. வேலூா் மக்களவை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூா் அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உட்பட அரசு அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்து வருகின்றனா். தவிர, தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள், அவா்களின் முகவா்களும் அவ்வப்போது வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், வாக்கு எண்ணும் மையம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது.

இதனிடையே, வேலூா் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் தவிர நுழைவு வாயில், அதைச் சுற்றியுள்ள பகுதிகள், தபால் வாக்கு எண்ணும் அறைகள் என வாக்கு எண்ணும் மையம் முழுவதும் 343 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் திடீரென சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் போவதாக தகவல்கள் வந்தன. இதைத்தொடா்ந்து, வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் அத்தகைய நிலை ஏற்படாமல் இருக்கவும், சிசிடிவி கேமராக்கள் தடையில்லாமல் இயங்குவதை உறுதி செய்யவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தாா். அத்துடன், தினமும் இரவுநேரத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்று அங்கு பொருத்தப் பட்டுள்ள கேமராக்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து வருகிறாா்.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன் கூடுதலாக ஒரு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com