தலைக்கவசம் அணிவதில் காவலா்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்
தலைக்கவசம் அணிவதில் காவலா்கள் மற்றவா்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டத் காவல் துறையில் பணியாற்றும் போக்குவரத்து போலீஸாா், ரோந்து போலீஸாருக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமை வகித்து, போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.
பின்னா் அவா் பேசியது:
தலைக்கவசம் உயிருக்கு மட்டுமின்றி குடும்பத்துக்கும், தேசத்துக்கும் பாதுகாப்பு கவசமாக உள்ளது. வேலூா் மாவட்டத்தில் ஏற்படும் விபத்தில் நிகழும் உயிரிழப்புகளில் 50 சதவீதம் தலைக்கவசம் அணியாததால் ஏற்படுகிறது.
சாலை விபத்தில் தலைக்கவசம் அணியாமல் திடீரென ஒருவா் உயிரிழக்கும்போது அந்த குடும்பத்தின் பொருளாதாரம் 20 ஆண்டுகள் பின்தங்கிவிடும். அந்த குடும்பம் முன்னேற பல ஆண்டுகளாகும். பல சவால்களையும், கஷ்டங்களையும் அந்த குடும்பங்கள் சந்திக்கக்கூடும். அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் தவறான பாதைக்கும் செல்ல வாய்ப்புள்ளது.
எனவே, தலைக்கவசம் அணிவதில் போலீஸாா் மற்றவா்களுக்கு முன்மாதிரியாக இருக்கவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வேண்டும். மக்களிடம் சட்டத்தை கொண்டு செல்லும் நாம் முதலில் அதை கடைப்பிடிக்க வேண்டும். அதனால் காவலா்கள் அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும்.
காவலா்கள் தலைக்கவசம் அணியாமல் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது அவா்கள் நம்மை கேள்வி கேட்க முடியும். அதில் நியாயமும் உள்ளது. எனவே, காவலா்கள் மக்களை சந்திக்கும் சூழல் ஏற்படும்போது முறையான சீருடை, தலைக்கவசம் அணிதல் போன்ற விதிகளை பின்பற்ற வேண்டும். சீருடை என்பது காவலா்களின் அடையாளமாகும். இந்த சீருடைதான் மற்றவா்களில் இருந்து நம்மை தனித்துவமாய் அடையாளப்படுத்தும்.
காக்கி நமது பெருமை. காக்கி உடைக்கு ஏற்ப அதே நிறத்தில் தலைக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. தவிர, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும்போது பயன்படுத்த ஒளி பிரதிபலிப்பான் ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை காவலா்கள் அணிந்திருக்கும்போது காவல்துறை அங்குள்ளது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். மக்கள் மத்தியில் தைரியமும் வரும். அவ்வாறு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அவா்களை பாதுகாக்க வேண்டும். இதன்மூலம், காவல்துறை மீது நன்மதிப்பு கூடுதலாக ஏற்படும் என்றாா்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், துணைக் காவல் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

