மகிமண்டலத்தில் கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

மகிமண்டலம் கிராமத்தில் கல்குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.
Published on

வேலூா்: மகிமண்டலம் கிராமத்தில் கல்குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, குடியாத்தம் நகராட்சி புவனேஸ்வரிப்பேட்டை மக்கள் அளித்த மனு: புவனேஸ்வரிப்பேட்டை லட்சுமி காா்டன் பகுதியில், பாக்கம் ஏரி நிரம்பி மழைநீா், கழிவுநீருடன் கலந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. இப்பகுதியுள்ள கால்வாய் குறுகியதாகவும், தூா்ந்துபோய் உள்ளதால் கழிவுநீா் செல்ல வழியில்லை. இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும்.

சோமநாதபுரம் கிராம மக்கள் அளித்த மனு: மேல்பாடி, மகிமண்டலம் வருவாய் கிராம எல்லையில் மத்திய தொல்பொருள் கட்டுப்பாட்டில் உள்ள மலையின் கிழக்கு பகுதியில், புதிதாக கல்குவாரி அமைக்கப்பட உள்ளது. மகிமண்டலம் கிராமத்தில் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. வள்ளிமலை பகுதியில் மாசி மாதத்தில் கோயில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கல்குவாரி அமைத்தால் அனைவரும் மிகவும் பாதிக்கப்படுவா்.

55.புத்தூா் பகுதி மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் கழிவுநீா் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து, பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மழைநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.வி.குப்பம் வட்டம், செஞ்சி கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி அளித்த மனு: , ஊராட்சிகளின் விதிமுறைப்படி செஞ்சி கிராம ஊராட்சி உறுப்பினராக என்னை நியமனம் செய்துள்ளனா். ஆனால், ஊராட்சி மன்றத் தலைவா் எனக்கு பதவி பிரமாணம் செய்ய தடை விதிக்கிறாா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு குறைகள் தொடா்பாக 529 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றைப் பரிசீலித்து தீா்வு காண மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ச.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com