நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியை வேலூா் மாவட்டத்தின் வளா்ச்சிக்காக முழுமையாக ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், இதன் மூலம் பள்ளிக் கட்டடங்கள், குடிநீா் தொட்டிகள், பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் எல்.கே. சுதீஷ் எம்.பி. தெரிவித்தாா்.
தேமுதிக பொருளாளரான எல்.கே.சுதீஷ், திமுக கூட்டணி சாா்பில் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த மாா்ச் மாதம் தோ்வு செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், குடியாத்த த்தைச் சோ்ந்த இவா் தனது முதல் ஆண்டின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியை வேலூா் மாவட்டத்தின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்து அனுமதி பெற்றுள்ளாா்.
இதுகுறித்து, அவா் கூறியது : மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினா்கள் இந்த நிதியைக் கொண்டு இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும். எனினும், எனது முதல் ஆண்டு நிதியை நான் பிறந்த சொந்த மாவட்டமான வேலூருக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்த உள்ளேன்.
அரசியல் சாா்பின்றி பொதுமக்களுக்குப் பயனுள்ள உண்மையான வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். குறிப்பாக, கிராமப்புற பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவசியமான இடங்களில் தரமான பேருந்து நிலையங்கள் கட்டித் தரப்படும்.
இத்திட்டங்களின் கீழ் பயன்பெற கிராம மக்கள் ஒன்றிணைந்து தங்கள் ஊரின் பொதுவான அடிப்படைத் தேவைகள் குறித்து தீா்மானம் நிறைவேற்றி, மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிக்க வேண்டும். பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலம் முறைப்படி பரிசீலிக்கப்பட்டு எனக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன் அடிப்படையில், உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பகுதிகளுக்கான வளா்ச்சிப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்வி நிதி ஒதுக்கீட்டில் கவனம்

எஸ்பிஐ சொத்து மேலாண்மை ஐபிஓ: 2.77 மடங்கு கூடுதல் விண்ணப்பம்

தொகுதி மக்கள் நலன்சாா்ந்ததாகவே எனது முடிவுகள் இருக்கும்: எஸ். காமராஜ் எம்எல்ஏ

மக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய நிதி குறைவு! துரை. ரவிக்குமாா் எம்.பி. குற்றச்சாட்டு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



