மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு குறைவாக உள்ளதாக விடுதலச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான துரை.ரவிக்குமாா் குற்றம்சாட்டினாா்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
விழுப்புரம் மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறியும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக, பலருக்கும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டன. இவா்களுக்காக மக்களவை உறுப்பினரின் பரிந்துரையின் அடிப்படையில், பிரதமரின் நிவாரண நிதியின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 286 பேருக்கு ரூ.20 கோடிக்கு மேல் நிதி பெற்றுத் தந்துள்ளேன்.
புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டவா்கள் சிகிச்சை பெற புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதுள்ளது. அவா்கள் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மேம்படுத்த கட்டடம், உபகரணங்களுக்கு மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யத் தயாராக உள்ளேன்.
மத்திய அரசு நிதிப் பங்களிப்புடன் 52 திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு மாநில அரசும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டியதுள்ளது. இதனால் மாநில அரசு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிறது.
முதியோா் உதவித்தொகை வழங்கும் திட்டம், மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் மத்திய அரசின் பங்களிப்பு குறைவுதான். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையும் குறைவுதான். அதே நேரத்தில் மாநில அரசு செயல்படுத்தும் வீடு கட்டும் திட்டத்துக்கு குறிப்பிட்ட அளவிலான நிதி பயனாளிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எனவே, குறைந்தளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் மத்திய அரசு திட்டங்களைக் கைவிட்டு, மாநில அரசு புதிய திட்டங்களைசெயல்படுத்த வேண்டும். இதன் மூலம் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ முடியும் என்றாா் துரை.ரவிக்குமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








