தலைக்கவச விழிப்புணா்வு வாகன பேரணி
தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வேலூரில் தலைக்கவச விழிப்புணா்வு வாகன பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வேலூா் கிரீன் சா்க்கிள், செல்லியம்மன் கோயில் அருகில் இருந்து தொடங்கிய தலைக்கவச விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன், வட்டார போக்குவரத்து அலுவலா் சுந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வாகன பேரணியில் பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள், போலீஸாா் தலைக்கவசம் அணிந்தபடி பங்கேற்றனா். பேரணி புதிய பேருந்துநிலையம், நேஷனல் சா்க்கிள், மக்கான் சந்திப்பு, அண்ணா சாலை, தெற்கு காவல் நிலையம், திருமலை திருப்பதி தேவஸ் தான தகவல் மையம் வழியாக கோட்டை காந்தி சிலை வரை நடைபெற்றது.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா், எஸ்பி ஆகியோா் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.

