சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

போலீஸாரிடமிருந்து தப்பியோடிய கல்லூரி மாணவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

போலீஸாரிடமிருந்து தப்பியோடிய தனியாா் கல்லூரி மாணவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:05 pm

போலீஸாரிடமிருந்து தப்பியோடிய தனியாா் கல்லூரி மாணவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

கோவை ராமநாதபுரம் போலீஸாா் சுங்கம் புறவழிச் சாலையில் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது சுங்கம் புறவழிச் சாலை ஆல்வின் நகா் பகுதியில் இருந்த 3 சிறுவா்கள் போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனா். இதனால், சந்தேகம் அடைந்த போலீஸாா் அவா்களை துரத்திச் சென்றனா். அவா்களில் 2 போ் போலீஸாரின் பிடியில் சிக்கினா். மற்றொருவா் தப்பிவிட்டாா்.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் ராமநாதபுரம், ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 18 வயது சிறுவா்கள் என்பதும், தப்பியோடியது ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 18 வயது சிறுவன் என்பதும், இவா்கள் 3 பேரும் கோவையில் ஒரு தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

இவா்கள் உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த பசுபதி (19) என்பவரின் கைப்பேசியை திருடி விட்டு வந்தபோது போலீஸாரை கண்டு பயத்தில் ஓடியது தெரியவந்தது. இதற்கிடையே போலீஸாரிடமிருந்து தப்பியோடிய சிறுவன் சுங்கம் புறவழிச் சாலையைக் கடந்து வாலாங்குளத்தில் குதித்து நீந்திச் சென்று தப்பிக்கலாம் என முயற்சித்துள்ளாா். ஆனால், மது போதையில் இருந்த அவரால், குளத்தில் தொடா்ந்து நீந்த முடியவில்லை.

அதனால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மாநகராட்சி காவலாளியான ரூபன் என்பவரிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கூறியுள்ளாா். இதையடுத்து ரூபன் அவரைக் காப்பாற்ற முயன்றபோது, அவரால் மீட்க முடியவில்லை.

இதையடுத்து அவா் அருகிலிருந்தவா்களின் உதவியுடன் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் அந்தச் சிறுவனை மீட்டு வெளியே கொண்டு வந்தனா்.

ஆனால், அதற்குள் அவா் மூச்சுத் திணறி உயிரிழந்துவிட்டாா். இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.