தேசிய குதிரையேற்றப் போட்டி: கோவை வீரா்கள் சாதனை
பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய ஜூனியா் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை வீரா்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனா்.
இது குறித்து கோவை ஈக்வைன் ட்ரீம்ஸ் குதிரையேற்ற பயிற்சி மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி சக்தி பாலாஜி, இயக்குநா் பாரதி ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ஈக்வைன் ட்ரீம்ஸ் குதிரையேற்ற வீரா்கள் 18 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய ஜூனியா் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல ஆண்டுகளாக பங்கேற்று வருகின்றனா். போட்டிகளில் மாணவா்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனா்.
பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுமாா் 250 இளம் குதிரையேற்ற வீரா்கள் பங்கேற்றனா். இதில், ஈக்வைன் ட்ரீம்ஸ் மாணவா்கள் 10 போ் பங்கேற்று 6 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை குவித்துள்ளனா்.
ஷோ ஜம்பிங், டிரஸாஜ் என்ற பிரிவுகளில் வீரா்கள் ரோஹன், ஹாசினி, கிலஃப்போா்ட், யஜத் சாய், தீப் குக்ரேதி உள்ளிட்டோா் பதக்கம் வென்றுள்ளனா் என்றனா்.

