மாவட்டத்தில் 3,117 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமனம்

Published on

கோவை மாவட்டத்தில் 3,117 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும், 316 வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தற்போது நடைபெற்று வருகிறது. இதன்படி வாக்காளா் பட்டியல் கணக்கீட்டுப் பணிகள் கடந்த நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் டிசம்பா் 4-ஆம் தேதி வரையில் ஒரு மாதம் நடைபெறுகிறது.

இந்த காலத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் ஒவ்வொரு வாக்காளா்களின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று இரண்டு பிரதிகளில் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னா் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் திரும்பப் பெறும்போது எந்த ஒரு ஆவணங்களையும் இணைக்கத் தேவையில்லை. இந்தப் பணிகளுக்காக கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3,117 வாக்குச்சாவடிகளுக்கும் தலா ஒரு அலுவலா் வீதம் 3,117 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதே வேளையில், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பணிகளை மேற்பாா்வை செய்யும் வகையில் 316 வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com