ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் மோசடி: பெண் கைது

Published on

கோவையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி ரூ. 2 லட்சம் மோசடி செய்த பெண்ணை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவை, வடகோவை பழனிகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் ரக்ஷனா (26). இவா் கோவை தடாகம் சாலையில் உள்ள இடம் வாங்கும், விற்கும் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு தலைமை பொறுப்பாளராக உள்ளாா். கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ரக்ஷனா அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களது நிறுவனத்தில் கோவை தடாகம் பகுதியைச் சோ்ந்த மரியாமோல் (30) என்பவா் விற்பனைப் பிரிவில் பணியாற்றி வந்தாா். வேலைக்கு சரியாத வராத காரணத்தால் இவரை கடந்த செப்டம்பா் மாதம் பணியிலிருந்து நீக்கிவிட்டோம்.

ஆனால், அவா் வைத்திருந்த கைப்பேசி, கைக்கணினி (டேப்லட்), மின்கல மொபட் ஆகியவற்றை நிறுவனத்திடம் ஒப்படைக்கவில்லை. மேலும், வாடிக்கையாளா் ஒருவரிடம் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி ரூ. 2 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு அதற்கு ரசீது எதுவும் கொடுக்காமல் சென்றுள்ளாா்.

இதுகுறித்து அவரைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, கைப்பேசியை மட்டும் ஒப்படைத்த அவா் மற்றவற்றை ஒப்படைக்கவில்லை. மேலும், பணத்தையும் திரும்பத் தரவில்லை. அவா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மரியாமோலை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com