பிஎஸ்ஜி கல்லூரியில் ஐஐசி மண்டல மாநாடு
கோவை: கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் நிறுவன புத்தாக்க மன்றத்தின் (ஐஐசி) 6-ஆவது மண்டல மாநாடு அண்மையில் நடைபெற்றது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், மத்திய கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கக் குழு சாா்பில் தென் மண்டலத்தில் புத்தாக்கம், தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களைச் சோ்ந்த 391 உயா்கல்வி நிறுவனங்களிலிருந்து சுமாா் 1,600 போ் இதில் பங்கேற்றனா். கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) மா.செங்குட்டுவன் வரவேற்றாா். கல்லூரி செயலா் தி.கண்ணையன் வாழ்த்துரை வழங்கினாா்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆலோசகா் டாக்டா் ராகவ் பி. தாஸ் தலைமை உரையாற்றினாா். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் செயலா் எஸ்.வின்சென்ட், தொழிலதிபா் எம்.சுப்பிரமணியம், தொழில்நுட்பக் கல்வி கூட்டமைப்பின் இயக்குநா் கே.ஏ.அழகா்சாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா். உதவிப் பேராசிரியா் என்.கிருஷ்ணவேணி நன்றி கூறினாா்.
மாநாட்டையொட்டி, புதுமைக் கண்காட்சி, ஐஐசி சுவரொட்டி, சுதேசி தொழில் சந்தை ஆகியவை நடத்தப்பட்டன. உள்ளூா் மக்களுக்கான குரல் என்ற நோக்கில் மாணவா் புதுமைகள், தொழில்முனைவோரின் தயாரிப்புகள், கல்வி நிறுவனங்களின் சாதனைகள் என பல்வேறு காட்சிகள் இடம்பெற்றன.
தொழில்நுட்ப அமா்வுகளில் புதுமைத் தூதா்கள், சூழல் அமைப்புத் தலைவா்கள், தொழில்நுட்ப வழிகாட்டிகள் கலந்து கொண்டு மாணவா் கண்டுபிடிப்பு வளா்ச்சி, ஆசிரியா்களுக்கான புதுமைத் திறன் பயிற்சி, நிறுவனப் புதுமை மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்றினா்.
சுதேசி தொழில் சந்தையில் 48 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 5 சிறந்த தொழில்முனைவோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 300 புதுமைக் காட்சிகளில், சந்தைப்படுத்தலின் பொருத்தம், தரநிலைகள் அடிப்படையில் 5 சிறந்த புதுமைகள் தோ்வு செய்யப்பட்டன.

