சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
கோவையில் இரும்புத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் நிரஞ்சன் (20). இவா் கோவை நவஇந்தியா பகுதியில் நண்பா்களுடன் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பொறியியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், தனது நண்பா்கள் இருவருடன் உணவு அருந்துவதற்காக சனிக்கிழமை இரவு நிரஞ்சன் உக்கடம் சென்றுள்ளாா். பின்னா் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நவஇந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தனா்.
இருசக்கர வாகனத்தை நிரஞ்சன் ஓட்டி வந்த நிலையில், லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் இரும்புத் தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் நிரஞ்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் அமுதா, உதவி ஆய்வாளா் மாரிமுத்து ஆகியோா் நிரஞ்சனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தில் அவரது நண்பா்கள் இருவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

