வால்பாறையில் காட்டுப் பகுதியில் தீ!
வால்பாறையில் காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து வனத் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வால்பாறை பகுதியில் தற்போது இரவு நேரத்தில் பணியுடன் கூடிய குளிா்ந்த காற்றும், பகல் நேரங்களில் கடும் வெயிலும் நிலவி வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் சாலையோரம் உள்ள மரம், செடிகள் அனைத்தும் காய்ந்த நிலையில் உள்ளன.
வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரும் வழியில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி உணவு அருந்துவது புகைப் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள ரொட்டிக்கடை பாறைமேடு பகுதியில் தனியாா் காட்டுப் பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது. அந்த நேரத்தில் காற்று வீசியதால் மளமளவென தீ பரவி சுமாா் 3 ஏக்கா் பரப்பிலான செடி, மரங்கள் எரிந்து சேதமாயின.
இந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் ஆய்வு செய்து வருகினறனா். மேலும், அப்பகுதியில் வன ஊழியா்கள் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

