

அரசு விதிகளுக்குப் புறம்பாகத் தனியார் கல்லூரி முதல்வர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கு, பாரதியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர் குறுக்கு வழியில் முயற்சித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடாமல் நிர்வாகக் குழு உறுப்பினர் திருப்பி அனுப்பியிருப்பது பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள், உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், முதல்வர்களுக்கு ஓய்வுபெறும் வயது 58 ஆக உள்ளது. ஆனால், கடந்த 2003-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 325-ன்படி பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மட்டும் ஓய்வுபெறும் வயதை 62 ஆக நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, 62 வயதுக்கு மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக ஆளுகைக்கு உள்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகளில்கூட பேராசிரியர், முதல்வர் பணியில் நீடிக்க முடியாது. ஆனால், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2007-ஆம் ஆண்டில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களின் ஓய்வுபெறும் வயது 62 என்பதை 65 ஆக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
இதன்மூலமாக, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சில தனியார் கல்லூரி முதல்வர்கள் 66 வயதுக்குப் பிறகும் பணியில் தொடர்ந்து வந்தனர். அரசு விதிகளுக்குப் புறம்பாக இந்த நடைமுறை இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அப்போதைய துணைவேந்தர் கணபதி தலைமையில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அரசாணையின்படி ஓய்வுபெறும் வயது 62 ஆக திருத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் கூட்டப் பொருள்கள் தொடர்பான குறிப்பில் ஓய்வுபெறும் வயது திருத்தப்பட்டதை குறிப்பிடாமல் விட்டுவிட்டனர். இதை சில உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியதை அடுத்து திருத்தப்பட்ட சுற்றறிக்கை கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது.
இதற்கிடையே, துணைவேந்தர் கணபதி கடந்த ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி இறுதியாக நடத்திய சிண்டிகேட் கூட்டத்தில், சுயநிதி கல்லூரி முதல்வராக இருக்கும் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர், வயது வரம்பை மீண்டும் 65 ஆக உயர்த்த பரிசீலித்ததாகவும், அது தொடர்பான விவாதம் நடைபெற்று வயது வரம்பு மீண்டும் 65 ஆக உயர்த்தப்பட்டதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சிண்டிகேட் உறுப்பினர் எஸ்.சாத்தப்பன் சிண்டிகேட் கூட்டத்தில் அப்படி ஒரு விவாதம் நடைபெறவில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறி பதிவாளருக்கு கடந்த மாதம் கடிதம் அனுப்பியிருந்தார். அரசு விதிகளுக்குப் புறம்பாக வயது வரம்பை உயர்த்தக் கூடாது என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் வயது வரம்பு உயர்த்தப்பட்ட தீர்மானத்தை அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர் மறைமுகமாக முயற்சித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதன்படி, அந்தத் தீர்மானத்தை சுற்றறிக்கையாக அனைத்துக் கல்லூரிகளுக்கு அனுப்பவும், அரசுக்கு வழங்கி ஒப்புதல் பெறுவதற்காக தற்போது பல்கலைக்கழகத்தை நிர்வாகித்து வரும் மூவர் குழு உறுப்பினர்களில் ஒருவருமான பி.திருநாவுக்கரசுவிடம் சம்பந்தப்பட்ட கோப்புகள் கையெழுத்துப் பெறுவதற்காக புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
ஆனால், அவர் அந்தக் கோப்புகளில் கையெழுத்திட மறுத்து அதைத் திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க துணைத் தலைவர் என்.பசுபதி கூறும்போது, துணைவேந்தர் கணபதி கடைசியாக நடத்திய சிண்டிகேட் கூட்டத்தில் சுயநிதி கல்லூரி முதல்வர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை. அப்படியான நிலையில், விவாதம் நடைபெற்றதாகவும், அதில் உறுப்பினர்கள் பங்கேற்று விவாதித்து ஒப்புதல் அளித்ததைப் போலவும் போலியாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரி முதல்வர்கள் சிலரின் அழுத்தம் காரணமாக நடைபெற்ற இந்த முறைகேடான தீர்மானத்தை, துணைவேந்தர் பதவியில் யாரும் இல்லாத நிலையில் அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கு பல்கலைக்கழகப் பதிவாளர், துணைவேந்தரின் உதவியாளர் உள்ளிட்ட சிலர் முயற்சித்து வருகின்றனர். அவர்களின் இந்த முயற்சிக்கு நிர்வாகக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஒப்புதல் அளிக்காதது வரவேற்கத்தக்கது. இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.