கோவை ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி போலி ஏடிஎம் அட்டை தயாரித்து லட்சக்கணக்கில் திருடிய வழக்கில் கைதான 6 பேர் மீது சைபர் கிரைம் போலீஸார் திங்கள்கிழமை மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை, சிங்காநல்லூர், காமராஜர் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ஜூன் 2-ஆம் தேதி பணம் எடுத்த 20 நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ. 11 லட்சம் திருடப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளியைச் சேர்ந்த பி.தமிழரசன் (26), ஜி.வாசிம் (30), சென்னையைச் சேர்ந்த எஸ்.நிரஞ்சன் (38), இலங்கை அகதியும், சென்னையில் வசித்து வருபவருமான டி. லவசாந்தன் (29), திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தென்றல் நகரைச் சேர்ந்த எஸ்.கிஷோக் (25), திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.மனோகரன்(19) ஆகிய 6 பேரையும் கிருஷ்ணகிரியில் ஜூன் 22 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடமிருந்து 20 போலி ஏடிஎம் அட்டைகள், 17 செல்லிடப்பேசிகள், 2 மடிக்கணினிகள், 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒரு வழக்கு: இந்த கும்பல் கோவை, லாலி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் இயந்திரத்தில், மூன்று பேரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்தையும் திருடியுள்ளது. இதுதொடர்பாக 6 பேர் மீதும் சைபர் கிரைம் போலீஸார் திங்கள்கிழமை மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக இலங்கை அகதி லவசாந்தன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்கிம்மர், கார்டு குளோனிங் கருவிகள்: இதுபோன்ற திருட்டில் ஈடுபடும் கும்பல்களுக்கு ஆன்லைனில் ரூ. 2 ஆயிரம் முதல் ஸ்கிம்மர் கருவிகள் கிடைக்கின்றன. அதேபோல, கார்டு குளோனிங் கருவிகளும் ரூ. 16 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களே சலுகை விலை மற்றும் பிளாஸ்டிக் ஏடிஎம் அட்டைகளையும் இலவசமாக வழங்குகின்றன. எனவே, இதுபோன்ற நிறுவனங்களிடம்
இருந்து கருவிகளை வாங்கும் நபர்கள் எளிதில் வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடி முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே, இதுபோன்று கருவிகளை விற்பனை செய்யும் ஆன்லைன் நிறுவனங்களை முடக்கினால் மட்டுமே முறைகேடுகளைத் தடுக்க முடியும்.
அனைத்து ஏடிஎம் மையங்களிலும் ஆன்ட்டி ஸ்கிம்மிங் கருவி பொருத்த அறிவுறுத்தல்: கோவையில் உள்ள வங்கி அதிகாரிகளுடன் மாநகர காவல் துறையினர் ஜூன் 28 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர். அதில், கோவையில் உள்ள ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்துவதைத் தடுக்கும் கருவியை (ஆன்ட்டி ஸ்கிம்மிங் டிவைஸ்) அனைத்து ஏடிஎம் மையங்களில் பொருத்தவும் அறிவுறுத்தப்படும். இந்தக் கருவியானது ஒரு சில தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் மட்டுமே உள்ளது. ஆனால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம் மையங்களிலும் அந்தக் கருவியைப் பொருத்த காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்படும். மேலும், ஏடிஎம் மையங்களுக்குள் வாடிக்கையாளர் சென்று அட்டையை பொருத்தியவுடன்அவர்களின் செல்லிடப்பேசிக்கு ரகசிய குறியீடு எண் (ஓடிபி) வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று காவல் ஆணையர் கு.பெரியய்யா தெரிவித்துள்ளார்.
6 மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களில் கைவரிசை
இந்த கும்பல் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, கர்நாடகம், கேரளம் என 6 மாநிலங்களில் உள்ள 50 க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கோடிக்கணக்கில் திருடியிருப்பதும், கோவையில் 6 இடங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
போலி ஏடிஎம் கார்டு தயாரித்து பணத்தை திருடுவது எப்படி?
வங்கிகளின் ஏடிஎம் மையங்களை நோட்டமிடும் கும்பல், அங்கு எந்தெந்தப் பகுதிகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் அட்டை செருகும் இடத்தின் அமைப்பு போன்றவற்றைத் தெரிந்து கொள்கிறது. பின்னர் ஆள் இல்லாத நேரங்களில் அங்கு சென்று, அட்டை செருகும் இடத்தில் ஸ்கிம்மர் கருவியையும், வாடிக்கையாளர் ரகசிய குறியீட்டு எண்ணைப் பதிவு செய்யும் இடத்துக்கு அருகில் கேமராவையும் பொருத்திவிடுகின்றனர். பின்னர் குறிப்பிட்ட நேரம் கழித்து ஏடிஎம் மையத்துக்குச் சென்று கேமராவையும், ஸ்கிம்மர் கருவியையும் எடுத்துக் கொள்கின்றனர். அதன்பின் ஸ்கிம்மரில் பதிவான தகவல்கள் அனைத்தையும் மடிக்கணினிக்கு மாற்றி விடுகின்றனர். அதைத்தொடர்ந்து, மடிக்கணினியில் இருந்து கார்டு குளோனிங் கருவி மூலமாக போலி ஏடிஎம் அட்டைகளுக்குத் தகவல்களை மாற்றி விடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவுக்குள் மிகப்பெரிய வினாத்தாள் மோசடி கும்பல் செயல்படுகிறது: சஞ்சய் ராவத்!

தலைவரான தனுஷ்! குழப்பத்தில் ரசிகர்கள்!
பஞ்சாப் வினாத்தாள் கசிவு! அமைச்சரை ராஜிநாமா செய்யக் கோரி பாஜக எம்பிக்கள் போராட்டம்!

பட்டமளிப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத மாணவர்களால் பரபரப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


