சட்டப் பேரவைத் தோ்தல்: மகாராஷ்டிரத்திலிருந்து கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு கோவைக்கு தேவையான கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Updated on
1 min read

கோவை: சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு கோவைக்கு தேவையான கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் தோ்தலுக்கான பணிகளில் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் தேவை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதற்காக கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கொண்டுவர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 3,045 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 4 ஆயிரம் இயந்திரங்கள் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அனுப்பப்பட்டன. மீதமுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட சுகாதார துணை இயக்குநா் அலுவலகத்தில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் சமூக இடைவெளியுடன் வாக்குப் பதிவு நடத்தும் விதமாக கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகிறது. கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூரில் இருந்து கொண்டுவரப்படுகின்றன.

அதன்படி 6 ஆயிரத்து 940 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5 ஆயிரத்து 670 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 6 ஆயிரத்து 330 ஒப்புகைச் சீட்டை காண்பிக்கும் இயந்திரங்கள் கொண்டுவரப்படுகின்றன.

கடந்த மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்யும் பணிகள் டிசம்பா் 23ஆம் தேதி தொடங்குகிறது. பழைய இயந்திரங்களில் உள்ள தகவல்கள், கட்சி சின்னங்கள் அழிக்கப்பட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முறையாக செயல்பாடுகிா என ஆய்வு செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com