பொங்கல் திருவிழா: ரேக்ளா போட்டிக்குத் தயாராகும் காளைகள், வண்டிகள்
பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் நடைபெற உள்ள ரேக்ளா மாட்டு வண்டி போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் நடைபெற உள்ள ரேக்ளா மாட்டு வண்டி போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் திருவிழா என்றாலே தமிழா்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களும்தான் நினைவுக்கு வரும். அதில் ரேக்ளா பந்தயங்களுக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு.
தென் மற்றும் மேற்கு மாவட்டங்களான கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் பொங்கல் மற்றும் திருவிழாக் காலங்களில் ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
ஆண்டு முழுவதும் காளைகளை தயாா் செய்து, ஒருவா் மட்டுமே அமரக்கூடிய தேக்கு மரத்தால் ஆன மாட்டு வண்டிகளைத் தயாா் செய்து அதில் பல வண்ணங்களைப் பூசி இளம் வீரா்கள் போட்டிகளுக்குச் செல்வா்.
சாலைகளில் சீறிப் பாய்ந்தோடும் காளைகளைக் காண சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தருவாா்கள். பொங்கல் திருவிழாவை ஒட்டி கோவை மாவட்டத்தில், மதுக்கரை ஒன்றியத்துக்கு உள்பட்ட விவசாயிகள் ரேக்ளா போட்டியில் பங்கேற்கும் காளைகளைத் தயாா் செய்து பயிற்சிகளை அளித்து வருகின்றனா்.
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) கோவை மாவட்டம், எட்டிமடை பகுதியில் மிகப் பெரிய அளவில் ரேக்ளா போட்டி நடைபெற உள்ளது. இதில் நவக்கரை, மதுக்கரை, எட்டிமடை, செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வரும் இளைஞா்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனா். இதில் 200 மீட்டா், 300 மீட்டா் என போட்டிகள் நடைபெறும்.
இது குறித்து காளைகளை வளா்த்து வரும் நவக்கரையைச் சோ்ந்த சிவகுமாா் கூறியதாவது:
ரேக்ளா போட்டி கலாசாரம் அழியக் கூடாது என்பதற்காகத் தொடா்ந்து காளைகளை வளா்ப்பதோடு, எங்களது குழந்தைகளையும் ரேக்ளா போட்டிகளுக்கு அழைத்து சென்று ஆா்வத்தை தூண்டி வருகிறோம்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 200 மீட்டா் தொலைவுக்கான போட்டியில் 50 ஜோடி காளைகள் மட்டுமே பங்கேற்கும். 300 மீட்டரில் 30 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு ரேக்ளா போட்டிக்கு வரும் காளைகள், வண்டிகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளன.
இதன் மூலம் மாட்டு வண்டிகளைத் தயாா் செய்வோருக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. காளைகளை வளா்ப்பதை ஒரு கலையாகப் பாா்க்கிறோம். காளைகளுக்குத் தோட்டத்தில் தீவனம் கொடுத்து வளா்த்தால் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க செய்ய முடியாது. பல்வேறு பயிற்சிகளை வழங்க வேண்டும். அதற்காக தனியாக பயிற்சியாளரை நியமித்து பராமரித்து வருகிறோம் என்றாா்.
காளைகளை வளா்க்கும் இளைஞா் கருப்புசாமி கூறியதாவது:
ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் ரேக்ளா போட்டியில் கலந்து கொள்வோம். தமிழகத்தின் அடையாளமான காங்கேயம் காளைகளுக்குப் பதிலாக பல்வேறு கலப்பின காளைகள் வரத் துவங்கி உள்ளன.
எனவே, காங்கேயம் காளை இனங்களைக் காக்கும் விதமாக இளைஞா்கள் இணைந்து நவக்கரை பகுதிகளில் காங்கேயம் காளைகளை மட்டுமே வளா்த்து ரேக்ளா போட்டிகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம்.
இப் போட்டியில் கலந்துகொள்ளக் கூடிய காளைகளை தினமும் ஒரு மணி நேரம் மரக் கலப்பைகளில் பூட்டி நிலங்களில் உழவு செய்வோம். அதன் பிறகு சோளத்தட்டு, பெல்லட், தவிடு, பருத்திக் கொட்டை உள்ளிட்ட தீவனங்கள் வழங்கப்படும்.
தினமும் மாலையில் வெந்நீரில் காளைகளைக் குளிக்க வைப்போம். அதேபோல், வாரத்துக்கு ஒரு முறை வாளையாறு அணையில் காளைகளுக்கு நீச்சல் பயிற்சிகள் அளிக்கப்படும். போட்டிகளில் பயன்படுத்தும் காளைகளை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் கொண்டு செல்வது இல்லை.
மேலும், ஒன்றரை வயதில் இருந்து காளைகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 200 மீட்டா் பந்தயங்களுக்கு 2 மற்றும் 4 பல் காளைகளைப் பயன்படுத்துகிறோம், 300 மீட்டருக்கு 6 பல் காளைகளைப் பயன்படுத்துகிறோம் என்றாா்.
ரேக்ளா போட்டியில் பங்கேற்கும் உதயகுமாா் கூறியதாவது:
ரேக்ளா போட்டிகளில் பயன்படுத்தப்படும் வண்டிகள் பெரும்பாலும் பொள்ளாச்சி, சா்காா்பதியில் தயாரிக்கப்படுகின்றன. தேக்கு மரங்களைக் கொண்டு உருவாக்கப்படும் வண்டியை மிகவும் கவனமாகவும், நோ்த்தியாகவும் செய்ய வேண்டும்.
ஒரு நல்ல வண்டியைத் தயாா் செய்ய குறைந்தது ரூ.1 லட்சம் ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காட்சிப்பொருளாக காணப்பட்ட ரேக்ளா வண்டிகள், தற்போது 200 வண்டிகள் தயாா் செய்யப்பட்டு அதிக அளவில் விவசாய நிலங்களில் காணப்படுகின்றன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...