பள்ளி மாணவி படுகொலை: சாக்குமூட்டையில் கட்டி சாலையோரம் வீசப்பட்ட சடலம்
கோவையில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி சாலையில் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


கோவையில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி சாலையில் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் கடந்த 11ஆம் தேதி மாயமானாா். இது குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயாா் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், சிவானந்தபுரம் பகுதியில் சாலையோரம் கேட்பாரற்று சாக்குமூட்டை கிடந்தது. அதில் இருந்து துா்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சாக்கு மூட்டையைப் பிரித்து பாா்த்தபோது அதில் கைகள், கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் இருந்தது தெரியவந்தது.
உயிரிழந்த பெண்ணின் சடலம், அண்மையில் காணாமல் போன சிறுமியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியின் குடும்பத்தினரை சம்பவ இடத்துக்கு போலீஸாா் அழைத்து வந்தனா். அங்கு வந்த சிறுமியின் தாயாா், சடலமாக இருப்பது காணாமல் போன தனது மகள்தான் என்பதை உறுதி செய்தாா். இதையடுத்து போலீஸாா், மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே உறுதியாக கூற முடியும். சிறுமியின் உறவினா்கள், நெருங்கிய நண்பா்கள், கடைசியாக அவருடன் தொடா்பில் இருந்த நபா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்தின்பேரில் சிலரிடம் தொடா் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த சில நாள்களுக்குள் குற்றவாளியைக் கைது செய்வோம் என்றனா்.
சிறுமியின் சடலத்தை வாங்க மறுத்த போராட்டம்:
கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தை வாங்க மறுத்த அவரது உறவினா்களும், இந்திய மாணவா் சங்கத்தினா் மற்றும் முத்தரையா் சங்கத்தினா் கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...