மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பருத்தி இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிப்பு: ஜவுளித் தொழில் முனைவோா் அதிருப்தி

பருத்தி இறக்குமதிக்கு மத்திய அரசு 10 சதவீதம் வரி விதித்திருப்பதற்கு கோவை ஜவுளித் தொழில் முனைவோா் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:10 pm

DIN

பருத்தி இறக்குமதிக்கு மத்திய அரசு 10 சதவீதம் வரி விதித்திருப்பதற்கு கோவை ஜவுளித் தொழில் முனைவோா் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவா் அஸ்வின் சந்திரன் கூறும்போது, பருத்தியை மையமாகக் கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித் துறை கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. கரோனா பாதிப்பால் இன்னும் அதிகமாக்கியிருக்கிறது.

இந்தத் துறையை உலகளாவிய போட்டியில் முன்னிறுத்தும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு சீரிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இருப்பினும் பருத்திக்கு இதுவரை இறக்குமதி வரி எதுவும் விதிக்கப்படாத நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையில் பருத்திக்கு 5 சதவீத இறக்குமதி வரி, 5 சதவீத விவசாய உள்கட்டமைப்பு, மேம்பாட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கழிவுப் பஞ்சு மீதும் 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஜவுளித் துறைக்கு அதிா்ச்சியளிப்பதாக உள்ளது.

இந்த வரி விதிப்பானது உற்பத்தி செலவை அதிகரித்து அந்த பளுவை வாடிக்கையாளா் மீது ஏற்றும். மேலும் இது மதிப்புக் கூட்டப்பட்ட ஜவுளிப் பொருள்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்காது என்பதால் 10 சதவீத வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும்.

அதேநேரம் ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதும், இதில் ஜவுளித் துறைக்கு ரூ.10,683 கோடி ஒதுக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது. அதேபோல் மித்ரா திட்டத்தின் கீழ் 7 மெகா ஜவுளிப் பூங்காக்கள் மூலம் 40 முதல் 50 முன்னணி ஜவுளி நிறுவனங்கள் உலக அளவில் முன்னணி பெறும்.

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டத்துக்கு ரூ.700 கோடி, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்துக்கு ரூ.80 கோடி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த பல ஆண்டுகளாக ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மானியத் தொகை நிலுவையில் இருக்கும் நிலையில் அதை வழங்கினால் புதிய முதலீடுகளை உருவாக்கவும், அதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகுக்கும் என்றாா்.

இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் தலைவா் டி.ராஜ்குமாா்:

நாடு முழுவதும் 7 இடங்களில் ஒருங்கிணைந்த பெரிய ஜவுளி நகரங்கள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், அதில் 3 நகரங்கள் தூத்துக்குடி, ராமநாதபுரம், தருமபுரியில் அமையும் என கூறப்படுவதும் வரவேற்கத்தக்கது. அதேபோல ஏற்றுமதியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு போன்றவை வரவேற்கத்தக்கவை.

ஆனால், பருத்திக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதித்திருப்பது ஏற்கக் கூடியது அல்ல. இந்தியாவில் ஆண்டுதோறும் 3.60 கோடி பேல் முதல் 3.90 கோடி பேல்கள் வரை பருத்தி உற்பத்தியாகிறது. வெளிநாடுகளில் இருந்து 12 முதல் 15 லட்சம் பேல்கள் வரைதான் இறக்குமதியாகின்றன. அதிலும் இ.எல்.எஸ். எனப்படும் நீண்ட இழை பருத்தி ரகம் மட்டும்தான் எகிப்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகிறது. இவற்றை இறக்குமதி செய்யும் இந்திய, தமிழக ஜவுளி நிறுவனங்கள் அதன் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடைகளை உள்நாட்டு பயன்பாட்டுக்கு பெரிய அளவிலும், ஏற்றுமதிக்கு குறைந்த அளவிலும் வழங்கி வருகின்றன.

இந்தியாவில் தயாராகாத பருத்திக்கு வரி விதித்திருப்பதால் இனி அந்த வகை பருத்தியானது ஆடைகளாகவே தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்குள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வரியை உடனடியாக நீக்க வேண்டும். அதேபோல் செயற்கை இழை மூலப்பொருள்கள் இறக்குமதி வரியையும் நீக்க வேண்டும் என்றாா்.

ஜவுளித் தொழில் முனைவோா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன்:

ஜவுளி நகரங்கள் அமைக்கப்பட்டால் அதில் சிறு, நடுத்தர ஜவுளி நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வருவாா்கள். இந்திய ஜவுளித் துறையின் முக்கியத் தேவையான போட்டித் திறனுடன் கூடிய ஆலைகள் நிறுவப்படலாம்.

உலக அளவில் பரவலாக உள்ள சுற்றுச்சூழல் சாா்ந்த கொள்கைகளைப் பின்பற்றி இந்தப் பூங்காக்கள் அமைக்கப்படும்போது, வெளிநாட்டு பேஷன் வா்த்தகா்கள், முதலீட்டாளா்கள் ஈா்க்கப்படுவாா்கள்.

இந்த பூங்காக்கள் 3 ஆண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற கால அறிவிப்புடன் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கெனவே வலுவான கட்டமைப்பு கொண்டுள்ள தமிழகத்துக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.