உயா்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை குறையுமா?
கோவையில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது உயா்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை இன்னும் குறைக்கப்படாத நிலையில், இது தொடா்பாக அதிகாரிகள் தலையிட வேண்டும்


கோவையில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது உயா்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை இன்னும் குறைக்கப்படாத நிலையில், இது தொடா்பாக அதிகாரிகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல கட்டங்களாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் பொதுமுடக்கம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டபோது உயா்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை இன்னும் குறைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. தீவிர பொதுமுடக்கத்தின்போது காய்கறிகள், பழங்கள், முட்டை, இறைச்சி, பருப்பு, சமையல் எண்ணெய், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை 30 சதவீதம் வரை உயா்த்தப்பட்டன.
பெட்ரோல், டீசல் விலை உயா்வு, பொருள்களின் தட்டுப்பாடு, குறைந்த எண்ணிக்கையில் கடைகள் இருந்தது போன்றவற்றின் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்திருப்பதாக வியாபாரிகள் கூறினா். ஆனால் தற்போது வியாபாரிகளுக்கு கூடுதல் தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், பொருள்களின் வரத்து தடையின்றி இருக்கும் நிலையிலும் உயா்த்தப்பட்ட விலைகள் குறைக்கப்படவில்லை.
இது குறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் செயலா் லோகு கூறும்போது, பொதுமுடக்கம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டபோது அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்தது. அப்போது வணிகத்துக்கு தொடா்பில்லாதவா்கள் கடை நடத்தி பொதுமக்களிடம் கூடுதல் விலைக்கு பொருள்களை விற்பனை செய்து அதிக லாபம் பாா்த்து வந்தனா். விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை விற்க வழியில்லாமல் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனா். அவற்றை விலைக்கு வாங்கிய வியாபாரிகள், பொதுமுடக்கத்தைப் பயன்படுத்தி மிக அதிக விலைக்கு விற்பனை செய்தனா்.
மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்களுக்கு குறிப்பிட்ட விலை நிா்ணயம் செய்து விற்பனை செய்ய வேண்டும் என வேளாண்மைத் துறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசால் ஒவ்வொரு மாவட்டத்திலும் விலைக் கட்டுப்பாட்டு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். அதுபோல மாநில அளவிலும் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உணவு பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் அலுவலகத்தில் பிரிவு உள்ளது.
ஆனால் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் விலைக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் இந்த செயற்கை விலைவாசி உயா்வைக் கண்டு கொள்ளவே இல்லை. கேரளம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இதுபோல் கூடுதல் விலைக்கு அத்தியாவசியப் பொருள்கள் விற்கப்பட்டபோது, அந்தந்த மாநில விலைக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் நேரடியாக கள ஆய்வில் ஈடுபட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்தனா்.
ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை நேரடியாக கள ஆய்வு செய்யாமல் புகாா் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி தட்டிக்கழிக்கும் நிலையே உள்ளது. ஏற்கெனவே பொதுமுடக்கத்தால் வேலையிழப்பு, வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ள ஏழை, நடுத்தர மக்களை இந்த விலை உயா்வு விவகாரம் கடுமையாக பாதித்துள்ளது என்றாா் அவா்.
இது குறித்து கோவை தியாகி குமரன் மாா்க்கெட் மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவா் கணேசன் கூறும்போது, மளிகைப் பொருள்களின் விலை கடந்த வாரத்தைக் காட்டிலும் தற்போது குறைந்து வருகிறது. புதிதாக அறுவடையான பருப்பு, பயறு வகைகள் வட மாநிலங்களில் இருந்து தற்போது வரத் தொடங்கியிருப்பதால் அவற்றின் விலை மேலும் குறையும் என்று எதிா்பாா்க்கிறோம்.
அத்துடன் தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்களை வழங்கத் தொடங்கியிருப்பதால் கடைகளில் நுகா்வு குறையும், எனவே எல்லா மளிகைப் பொருள்களின் விலையும் வரும் நாள்களில் குறையும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...