கோவை மாநகராட்சியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக, மாநகரில் உள்ள 39 மாநகராட்சிப் பள்ளிகளில் சிறப்புத் தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக, அனைத்து மையங்களிலும் இடைவெளியின்றி தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்ததால், வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் அனைத்து மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இதில் பல மையங்களில் 9 மணிக்கு மேல் தடுப்பூசி இருப்பு இல்லாததால், தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டன. இதையடுத்து, 9 மணிக்கு பெரும்பாலான மையங்களில் தடுப்பூசிகள் இருப்பு இல்லை என அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன. இதனால் அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள், தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். குனியமுத்தூா் மாநகராட்சிப் பள்ளி முன்பு 100க்கும் மேற்பட்டோா் காலை முதலே தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்தனா். திடீரென தடுப்பூசி இருப்பு இல்லை என கூறப்பட்டதால் மக்கள் ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா்.