/

கோவையில் 3 ஆவது காலாண்டில் காசநோய் பாதிப்பு அதிகரிப்பு

கோவையில் கரோனா நோய்த் தொற்று காலங்களில் குறைந்திருந்த காசநோய் 3 ஆவது காலாண்டில் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:31 pm

DIN

கோவையில் கரோனா நோய்த் தொற்று காலங்களில் குறைந்திருந்த காசநோய் 3 ஆவது காலாண்டில் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நிலையை உருவாக்க மத்திய அரசு சாா்பில் காசநோய் ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் களப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் கோவை மாவட்டத்தில் 3 ஆவது காலாண்டில் 700 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவே 2 ஆவது காலாண்டில் 444 பேருக்கு மட்டுமே காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இது தொடா்பாக கோவை மாவட்ட காசநோய் மைய அதிகாரிகள் கூறியாதவது: கரோனா நோய்த் தொற்று பாதிப்பு போலவே காசநோய்க்கும் சளி, காய்ச்சல், இருமல் ஆகியவையே அறிகுறிகளாகும்.

இதனால் கரோனா நோய்த் தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்திவிடுவாா்கள் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பரிசோதனை செய்துகொள்ளாமல் இருந்து வந்தனா். இதனால் கரோனா நோய்த் தொற்று பரவல் உச்சத்தில் இருந்த 2 ஆவது காலாண்டில் காசநோய் பாதிப்பு சற்று குறைந்திருந்தது. தற்போது கரோனா நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதால் முன்புபோல காசநோய் பரிசோதனைகளும் அதிகரித்துள்ளது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாநில அளவில் 2 ஆவது காலாண்டைக் காட்டிலும் 3 ஆவது காலாண்டில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காசநோய் உறுதி செய்யப்படும் நோயாளிகளுக்கு 6 மாதங்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ரிஃபாம்பிசின், ஈத்தம்புட்டால், ஐசோனியாஸ்டு மருந்துகள் அளிக்கப்படுகின்றன. நோயின் தீவிரத்தைப் பொருந்து 6 முதல் 24 மாதங்கள் வரையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

காசநோய் பாதிக்கப்பட்ட நோயாளியின் எச்சில் திவளைகள் மூலம் மற்றவா்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.