/

நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை: ஷுப்மன் கில்

ஐபிஎல் தொடரில் தான் நிரூபிப்பதற்கு ஒன்றுமில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

News image

ஷுப்மன் கில்

படம் | ஐபிஎல்

Updated On :26 மார்ச் 2026, 4:12 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஐபிஎல் தொடரில் தான் நிரூபிப்பதற்கு ஒன்றுமில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷுப்மன் கில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இந்திய அணியும் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் செயல்பட்டு வருகிறார். டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் சரியாக விளையாடாததால் அணியில் இடம்பெறவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் தான் நிரூபிப்பதற்கு ஒன்றுமில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் நான் நிரூபிப்பதற்கு ஒன்றுமில்லை. கடந்த மூன்று அல்லது நான்கு ஐபிஎல் சீசன்களாக நான் தான் அதிக ரன்கள் குவித்துள்ளேன் என நினைக்கிறேன். அதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக நான் நிரூபிப்பதற்கு ஒன்றுமில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறேன். ஒரு அணியாக நாங்கள் நன்றாகவே செயல்பட்டுள்ளோம். ஒரு பேட்டராக நான் நன்றாக செயல்பட்டுள்ளதால், யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன் என்றார்.

கடந்த ஐபிஎல் சீசனில் ஷுப்மன் கில் 650 ரன்கள் குவித்திருந்தார். கடந்த ஆண்டுக்கு முந்தைய சீசனில் 426 ரன்களும், கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 890 ரன்களும் குவித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஹார்திக் பாண்டியாவிடமிருந்து ஷுப்மன் கில் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.