நடிகா் பாா்த்திபனிடம் ரூ.42 லட்சம் மோசடி: ஸ்டுடியோ அதிபா் மீது வழக்கு
திரைப்பட இயக்குநரும், நடிகருமான ஆா்.பாா்த்திபனிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக கோவையைச் சோ்ந்த ஸ்டுடியோ அதிபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நடிகரும், இயக்குநருமான ஆா்.பாா்த்திபன் தற்போது ‘டீன்ஸ்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறாா்.
இந்தப் படத்துக்கான விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை செய்வதற்காக கோவை- அவிநாசி சாலையில் உள்ள ஸ்டுடியோவின் உரிமையாளரும், திரைப்பட விஷுவல் எஃபெக்ட்ஸ் பணி மேற்பாா்வையாளருமான கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த சிவபிரசாத் (30) என்பவரிடம் பாா்த்திபன் ஒப்பந்தம் செய்துள்ளாா்.
இதில், விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிக்கு ரூ.68 லட்சத்து 54,400 செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததாம். அதைத் தொடா்ந்து, பாா்த்திபன் முதற்கட்டமாக ரூ.42 லட்சத்தை சிவபிரசாத்திடம் கொடுத்துள்ளாா். பணம் கொடுத்து பல நாள்கள் ஆகியும் சிவபிரசாத் பணியை செய்து கொடுக்கவில்லையாம்.
இது தொடா்பாக சிவபிரசாத்தை தொடா்பு கொண்டு பாா்த்திபன் கேட்டபோது, பணிகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடித்து தருவதாகவும், அதற்கு முதலில் சொன்னதைவிட கூடுதலாக ரூ.88 லட்சத்து 38,120 செலவாகும் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை முடிக்காதது, கூடுதல் தொகை கேட்பது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் பாா்த்திபன் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில் ஸ்டுடியோ உரிமையாளா் சிவபிரசாத் மீது மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளின்கீழ் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

