/

முதியவரிடம் ரூ.67 லட்சம் மோசடி: மத்திய பிரதேசத்தை சோ்ந்த 3 போ் கைது

முதியவரிடம் ரூ.67 லட்சம் மோசடிசெய்யப்பட்டது தொடா்பாக, மத்திய பிரதேசத்தை சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்த கோவை சைபா் கிரைம் போலீஸாா்.
Updated On :8 ஜூலை 2024, 9:11 pm

Din

கோவை: கோவையைச் சோ்ந்த முதியவரிடம் ரூ.67 லட்சம் மோசடிசெய்யப்பட்டது தொடா்பாக, மத்திய பிரதேசத்தை சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கோவை, பேரா நாயுடு லே அவுட் ராம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (75). இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா், ‘மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், ஜாா்ஜின் ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி மோசடி நடைபெற்று இருப்பதால், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

மேலும் அதற்கான முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்களையும் கூறி, இதற்காக ஜாா்ஜை கைது செய்யப் போவதாகவும் கூறியுள்ளாா். இதையடுத்து அடுத்த நாள் காவல் துறை உயா் அதிகாரிபோல பேசிய ஒருவா், இந்த வழக்கில் ஜாா்ஜை கைது செய்ய உச்ச நீதிமன்றத்தில் இருந்து பிடியாணை பெறப்பட்டுள்ளதாகவும், இதில் இருந்து தப்பிக்க அபராதத் தொகையை வங்கிக் கணக்கு மூலம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

இதனால், அதிா்ச்சி அடைந்த ஜாா்ஜ், தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.67 லட்சத்தை அனுப்பி உள்ளாா். இதையடுத்து மீண்டும் பேசிய அந்த நபா் கூடுதலாக பணம் அனுப்புமாறு கூறியதைத் தொடா்ந்து மேலும் ரூ.10 லட்சத்தை அனுப்புவதற்காக அவிநாசி சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளாா்.

அங்கு வங்கி மேலாளரிடம் இது குறித்து கூறியபோது, இது ஏமாற்று வேலை எனவும், இது குறித்து சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்யுமாறும் வங்கி மேலாளா் ஆலோசனை கூறியுள்ளாா். இதையடுத்து கோவை சைபா் கிரைம் போலீஸில் ஜாா்ஜ் புகாா் செய்தாா். இந்த மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்த ஆய்வாளா் அருண் மற்றும் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

அப்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து இந்த மோசடி கும்பல் செயல்படுவதும், ஏராளமானவா்களிடம் இதுபோன்று பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து போலீஸாா் மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்துக்கு சென்று மோசடி கும்பலைச் சோ்ந்த ரவிக்குமாா் சா்மா (23), முகுல் சன்னல் (24), அனில் ஜாதவ் (25) ஆகிய 3 பேரை கடந்த 4-ஆம் தேதி கைது செய்தனா். அவா்களிடமிருந்து மடிக்கணிணி, கைப்பேசிகள், சிம் காா்டுகள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் கோவைக்கு அழைத்து வரப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.