மேயா் பதவியை கல்பனா ராஜிநாமா செய்தது ஏன்? அமைச்சா் சு.முத்துசாமி விளக்கம்
கோவை மாநகராட்சி மேயா் ராஜிநாமா செய்ததற்கான காரணம் குறித்து என வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி விளக்கம் அளித்தாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சா் சு. முத்துசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
பின்னா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சாா்பில் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 1048 பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வைப்பு நிதி பத்திரத்தை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவையில் அவிநாசி மேம்பாலப் பணி, சா்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் விரைவுபடுத்தப்படும். கோவை மேயராக இருந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என்றுதான் ராஜிநாமா கடிதத்தை வழங்கியுள்ளாா். அவா் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவது சரியானது அல்ல. அரசு மதுபானக் கடைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. அனுமதி இன்றி மதுக்கடைகளை நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் விலைக்கு மது விற்றோா் பலரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கோவை மாநகராட்சியில் சில இடங்களில் மாசு கலந்த குடிநீா் வருவதாக புகாா்கள் வந்துள்ளன. அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் ஈஸ்வரசாமி, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

