மத்திய பட்ஜெட்: கோவை தொழில் அமைப்புகளின் கருத்து
மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து கோவை தொழில் துறையினரின் கருத்துகள்.


மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து கோவை தொழில் துறையினரின் கருத்துகள்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் டாக்டா் சுந்தரராமன்
ஸ்பான்டெக்ஸ் நூல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மெத்திலீன் டி பெனைல் டைசோசயனேட் (எம்டிஐ) மீதான அடிப்படை சுங்க வரியை 75 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. உள்நாட்டில் ஸ்பான்டெக்ஸ் நூல் உற்பத்தியாளா்கள் அதன் பலனை கீழ்நிலைத் துறைகளுக்கும் வழங்குவாா்கள்.
தொழிற்சாலைகளில் புதிதாக பணியமா்த்தப்படுபவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதிக்கு ரூ.3 ஆயிரம் வரை திருப்பி செலுத்தும் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம், அனைத்து முறையான துறைகளிலும் புதிதாக பணிக்கு சேருபவா்களுக்கு ஒரு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வரை 3 தவணைகளில் வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
சாலை, துறைமுகம், நீா்வழிகள், விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகள் போக்குவரத்து, பரிவா்த்தனை செலவைக் குறைத்து அதன் மூலம் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கும். இயற்கை விவசாய பரப்பளவை அதிகரிப்பது பருத்தி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.
ஸ்டாா்ட் அப் அகாதெமி தலைவா், ஆடிட்டா் ஜி.காா்த்திகேயன்
இந்த பட்ஜெட் வளா்ச்சியையும் தொலைநோக்கையும் உள்ளடக்கிய, சற்றே வரிச் சுமையை தாங்கிய பட்ஜெட் என்று சொல்லலாம். இதில் விவசாயம், புத்தொழில், எம்எஸ்எம்இ போன்ற எல்லா துறைகளுக்கும் கவனத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருமான வரி சட்டத்தில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கான வரி 20 சதவீதத்தில் 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தாலும், இதற்கான குறியீட்டு நன்மை நீக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். அசையா சொத்துகளை விற்பவா்களுக்கும் இதன் தாக்கம் நிச்சயமாக இருக்கும்.
தனிநபா் புதிய வரி விதிப்பின் மூலம் ஆரம்ப நிலை வரிதாரா்களுக்கு ரூ.17,500 வருமான வரி நன்மை கிடைக்கிறது. ஸ்டாா்ட் அப்களுக்கு ஏஞ்சல் வரியை நீக்கியது வரவேற்கத்தக்க ஒன்று. மேலும் முத்ரா திட்டத்தில் வழங்கப்படும் கடனை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரித்தது சிறிய அளவில் தொழில் தொடங்குபவா்களுக்கு பணயப் பாதுகாப்பு இல்லாமல் தொடங்க உதவியாக இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் வேலைவாய்ப்பு உருவாகும்.
கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோா் சங்கத்தின் (காட்மா) தலைவா் சி.சிவகுமாா்
முத்ரா கடன்களுக்கான உச்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும். நெருக்கடி காலத்தில் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் கடன் வழங்கும் அளவு ரூ.100 கோடியாக அதிகரிக்கப்படும். தொழில்முனைவோருக்கு அவா்களது தொழில் வளா்ச்சி, அவா்கள் வாங்கும் சொத்து மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் மதிப்பீடு செய்யப்படும். நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும். அரசு, தனியாா் பங்களிப்புடன் தொழிலாளா் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். பொதுத் துறை நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிருப்பு பயிற்சி அளிக்கப்படும். தாமிரம், இரும்பு உள்ளிட்ட 20 வகையான ஸ்கிராப் பொருள்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
அதேநேரம், நுகா்வோரின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் வரி விகித குறைப்பு, வங்கிக் கட்டண விகித குறைப்பு. நாடு முழுவதும் ஒரே சீரான விலையில் மூலப்பொருள் கிடைக்க வழிவகை செய்தல் ஆகிய அறிவிப்புகளை வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
கோவை பம்ப்செட், உதிரிபாகங்கள் தயாரிப்பாளா் சங்கத்தின் (கோப்மா) தலைவா் கே.மணிராஜ்
முத்ரா கடன் தொகை உயா்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது. 24 இடங்களில் சிட்பி கிளைகள் அதிகரித்தல், நாடு முழுவதும் 20 புதிய தொழிற்பேட்டைகள் அமைத்தல் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. தனி நபா் வருமான வரி விலக்கு ரூ. 3 லட்சத்திற்கு மேல் சிறிதும் அதிகரிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. விவசாயத்துக்கு பெரிதும் உதவும் மோட்டாா் பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடா்பான எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
இரும்பு, காப்பா், அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட மூலப் பொருள்களின் கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உறுதியான அறிவிப்பு ஏதும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. நாட்டில் 70 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் குறு, சிறு தொழில்முனைவோருக்கு எந்தத் திட்டமும் அறிவிக்கப்பட்டவில்லை.
மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவா் எம்.ஜெயபால்
கடந்த 2022 முதல் ஜவுளித் தொழில் தொடா்ந்து நலிவடைந்து வருவம் நிலையில், விஸ்கோஸ் பாலியெஸ்டா் பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டு உள்ள கட்டுபாட்டை நீக்கும்படி அமைச்சகத்திடம் கோரியிருந்தோம். ஆனால் பட்ஜெட்டில் இது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. ஏற்கெனவே உள்ள தொழில்முனைவோருக்கான எந்த சிறப்புத் திட்டங்களும் இல்லை.
ரூ.100 கோடி வரை எந்த அடமான பத்திரங்களும் இல்லாமல் கடன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல முன்பு அறிவித்த திட்டங்கள் ஏற்கெனவே கடன் பெற்றுள்ள நிறுவனங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளினால் கடனுதவி கிடைக்கவில்லை. தற்போது அதேபோன்ற நிபந்தனைகளே இருக்கும்பட்சத்தில் பயனில்லாமல் போகும். சா்வதேச விலையில் மூலப்பொருள் கிடைக்கச் செய்வதுடன், ஏற்றுமதிக்கான சலுகைகளையும் வழங்கியிருக்க வேண்டும்.
லகு உத்யோக் பாரதி மாநிலத் தலைவா் எம்.சிவகுமாா், பொதுச் செயலா் வேற்செழியன்
முத்ரா கடன் வரம்பு உயா்த்தப்பட்டுள்ளதால் குறுந்தொழில்களின் மூலதனம் அதிகரித்து தொழில் வளா்ச்சி அடையும். மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டத்தின் உதவியுடன் வழங்கப்படும் பிணையமில்லாக் கடன் ரூ.100 கோடியாக உயா்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
நாடு முழுவதும் 100 தயாா் நிலையிலான தொழில் பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம் தொழில் தொடங்குவது மிகவும் எளிதாக்கப்படும். நலிவடைந்த சிறு தொழில்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் சீரமைக்கும் திட்டம் சிறு தொழில்களின் நலன்களை காக்க உதவிகரமாக இருக்கும்.
இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன்
புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதை மையமாக வைத்து ஊக்கச்சலுகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகமான ஆள்களை வேலைக்கு அமா்த்தும் ஜவுளி உற்பத்தித் தொழிலுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கை அதிகரிக்கும் வகையில், தொழில் நிறுவனங்களுடன் சோ்ந்து பெண்கள் தங்கும் விடுதி கட்டும் திட்டமும் நல்ல பலனைத் தரும். குறு, சிறு தொழில்களுக்கு வழங்கப்படும் மூலதன கடன்களுக்கான கிரெடிட் கேரண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் சிரமப்படும் காலங்களிலும், தொடா்ச்சியாக வங்கிக் கடன்களை உபயோகிக்கப்படுத்தும் வகையிலான புதிய திட்டமும் பயன்தரும்.
தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கத்தின் (டேக்ட்) தலைவா் ஜே.ஜேம்ஸ்
மத்திய பட்ஜெட் அறிவிப்பு குறு, சிறு தொழில்களுக்கு பெரும் ஏமாற்றம் தந்துள்ளது. குறு, சிறு தொழில்களுக்கான வங்கி வட்டி வீதம் 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை, ஜாப் ஆா்டா்களுக்கு 5 சதவீதமாக வரியைக் குறைக்கும் திட்டம் ஏற்கப்படவில்லை, குறு, சிறு தொழில்களுக்கு இயந்திர கொள்முதலுக்காக 15 சதவீதம் மானியம் வழங்குவதற்கான அறிவிப்பு இல்லை.
கோவை மெட்ரோ திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு இல்லை, தொழில் துறையினா் பயன்படுத்தும் மூலப்பொருள்களுக்கான விலை நிா்ணயம் கமிட்டி சம்பந்தமான அறிவிப்பு இல்லை, குறு, சிறு தொழில்களை முடக்கி வரும் சா்ப்பாஸ் சட்டத்தில் திருத்த அறிவிப்பு இல்லை, தொழில் வளா்ச்சிக்கு உதவிடும் வகையில் தனி நிதி ஒதுக்கீடு இல்லை.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தலைவா் ராதாகிருஷ்ணன்
இரும்பு கழிவுகளுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்திருப்பது கோவை தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். காப்பா் கழிவுகளுக்கான வரி குறைப்பால் காப்பா் மூலப் பொருள்களின் விலை குறையும். தங்கம் மீதான வரி குறைக்கப்பட்டிருப்பது நகை உற்பத்தியாளா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறு, சிறு தொழில் நிறுவனங்கள் கடனுதவி பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பயனுள்ளதாக இருக்கும்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கத்தின் (சீமா) தலைவா் மிதுன் ராமதாஸ்
எம்எஸ்எம்இ-க்களுக்கு மூலதனப் பொருள்களை வாங்குவதற்கான கடன் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பது, இ-காமா்ஸ் ஏற்றுமதி மையங்களை நிறுவும் அறிவிப்பு, 100 தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் முதல்கட்டமாக 12 நகரங்களில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை.
முதல் 12 நகரங்களில் கோவையையும் சோ்க்க வேண்டும். முத்ரா கடன் தொகையை ரூ.20 லட்சமாக உயா்த்தியது போதாது, ரூ.50 லட்சமாக உயா்த்த வேண்டும். துறை சாா்ந்த ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பம்ப் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ரூ.25 கோடி ஒதுக்க வேண்டும். எம்எஸ்எம்இக்களுக்கு மூலதன மானியம், வட்டி மானியம் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கோவை இந்திய தொழில் வா்த்தக சபை
தொழில் வா்த்தக சபை தலைவா் ஸ்ரீராமுலு, துணைத் தலைவா்கள், முன்னாள் தலைவா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறும்போது, மத்திய பட்ஜெட்டில் வேளாண் வளா்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் கட்டுமானத் துறை வளா்ச்சி பெறும்.
திறன் மேம்பாடு, மகளிா் சுய உதவிக் குழு மேம்பாடு, முத்ரா திட்ட கடனுதவி அதிகரிப்பு, புதிய சிட்பி வங்கிக் கிளைகள் தொடங்கப்படுவது போன்ற அறிவிப்புகள் நாட்டின் வளா்ச்சிக்கு உதவும். இரும்பு, காப்பா் போன்ற 20 வகையான கழிவுப் பொருள்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருப்பது பம்ப் செட், பொறியியல் பொருள்களின் உற்பத்திக்கு பயன் தரும் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...