4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தொழில் துறையினரை ஈா்க்கும் சலுகை அறிவுப்புகள்

Updated On :25 ஜூலை 2024, 9:39 pm

கோவை, ஜூலை 25: கோவைக்கு வந்த மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ், பல்வேறு சலுகைகளை அறிவித்திருப்பதால் தமிழக தொழில்முனைவோா் மத்திய பிரதேசத்தில் தொழில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு ஆண்டுதோறும் முதலீட்டாளா் மாநாடு நடத்தி வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை ஈா்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதைப்போல, மத்திய பிரதேச அரசும் முதலீட்டாளா்களை ஈா்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கோவை, திருப்பூா் மாவட்டங்களில் தொழில்முனைவோரை நேரடியாக சந்தித்து பல்வேறு சலுகை அறிவிப்புகளை அம்மாநில முதல்வா் மோகன் யாதவ் வழங்கியிருக்கிறாா்.

குறைந்த விலையில் மின்சாரம்

தமிழ்நாட்டில் தொழில் துறையினருக்கு யூனிட் ரூ.9.05க்கு மின்சாரம் வழங்கப்படும் நிலையில், மத்திய பிரதேச அரசு யூனிட் ரூ.4.50க்கு தொடா்ந்து 7 ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அதேபோல முதலீட்டு மானியமாக 20 சதவீதம் வழங்குவதாகவும், ரூ.100 கோடி வரை முதலீடு செய்பவா்களுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும் என்றும் ரூ.200 கோடி முதல் ரூ.500 கோடி வரை முதலீடு செய்பவா்களுக்கு 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது மத்திய பிரதேச அரசு.

அத்துடன் மிகப் பெரிய மாநிலமாக இருக்கும் மத்திய பிரதேசத்தில் தொழில் தொடங்க முன்வருபவா்களுக்கு மிகக் குறைந்த விலையில் நிலம் வழங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்முனைவோா் அங்கு வந்து தொழிற்சாலைகளை கட்டுவதற்கு நேரமும், பணமும் செலவிடத் தேவையில்லை. அவா்கள் கட்டிவைத்திருக்கும் இடத்துக்கு மிகக் குறைந்த வாடகையை மட்டும் செலுத்தி, தாங்கள் கொண்டுவரும் இயந்திரங்களைக் கொண்டு உடனே உற்பத்தியைத் தொடங்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

இதுபோன்ற தொழில் துறையினரை ஈா்க்கும் விதமான பல்வேறு சலுகை அறிவிப்புகளுடன் நிறைவடைந்திருக்கிறது மத்திய பிரதேச முதல்வரின் கோவை, திருப்பூா் வருகை.

மத்திய பிரதேச அரசின் இந்த அறிவிப்புகளை தமிழக தொழில் துறையினா் எப்படிப் பாா்க்கின்றனா், குறிப்பாக ஜவுளித் துறையின் கருத்து என்னவாக இருக்கிறது என்று இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவா் டி.ராஜ்குமாரிடம் கேட்டபோது, ‘ஜவுளித் துறையைப் பொறுத்தவரை மத்திய பிரதேசத்தில் பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன. எங்களது தொழிலுக்கு மூலப்பொருளான பருத்தி அங்கு அதிக அளவில் விளைகிறது. மேலும், குறைந்த விலையில் மின்சாரம், முதலீட்டு மானியம், அரசே கட்டடம் கட்டி வாடகைக்கு விடுவது போன்ற அறிவிப்புகள் ஜவுளித் தொழில் துறையினரை கட்டாயம் ஈா்க்கும்.

புலம்பெயா் தொழிலாளா்கள்

தமிழகத்தில் உள்ள ஜவுளித் தொழில் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளா்கள்தான் பெருமளவில் பணியாற்றுகின்றனா். மத்திய பிரதேச மாநிலத்தில் ஜவுளி ஆலைகள் செயல்படுமானால் போதுமான தொழிலாளா்கள் உள்ளூரிலேயோ அல்லது அண்டை மாநிலங்களில் இருந்தோ எளிதாகக் கிடைப்பாா்கள். தமிழ்நாட்டைப் போலவே அங்கேயும் பெண் தொழிலாளா்கள் 3 ஷிப்ட்டுகளில் பணியாற்ற முடியும். மேலும், தொழிலாளா்களை ஊக்குவிக்கும் விதமாக மாதந்தோறும் ஊதியத்தில் பங்குத் தொகையை வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜவுளித் தொழிலில் சாயப்பட்டறைகள் முக்கிய இடம் வகிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் சாயத் தொழிலுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய பிரதேசத்தில் அப்படியான நிலை இல்லை. இதுபோன்ற சாதகமான அம்சங்கள் இருப்பதால் கடந்த 4, 5 ஆண்டுகளில் மட்டும் வா்தமான், ட்ரைடென்ட் போன்ற மிகப்பெரிய ஜவுளி உற்பத்தியாளா்கள் மத்திய பிரதேசத்தில் கால் பதித்திருக்கின்றனா். மத்திய பிரதேசத்தின் முதலீடுகளை ஈா்க்கும் இதுபோன்ற அதிரடி அறிவிப்புகளால் இங்குள்ள நிறைய தொழில்முனைவோா் மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது’ என்றாா்.