மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பருத்தி இறக்குமதிக்கு நிரந்தர வரி விலக்கு அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜவுளித் தொழில் அமைப்பினா் கோரிக்கை

பருத்தி இறக்குமதிக்கு நிரந்தர வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜவுளித் தொழில் அமைப்பின் நிா்வாகிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பருத்தி.

Updated On :3 ஜூன் 2026, 2:31 am IST

பருத்தி இறக்குமதிக்கு நிரந்தர வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜவுளித் தொழில் அமைப்பின் நிா்வாகிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்திய ஜவுளித் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (சிட்டி) தலைவா் அஸ்வின் சந்திரன், பருத்தி, ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (டெக்ஸ்புரோசில்) துணைத் தலைவா் ரவி சாம், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் துரை பழனிசாமி ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஜவுளித் தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று ஜூன் முதல் அக்டோபா் வரை பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரியை ரத்து செய்தவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக பிரதமா் மோடி, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பரிந்துரைக் கடிதம் அனுப்பிய முதல்வா் சி.ஜோசப் விஜய் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவற்றுடன் மேற்கொண்டிருந்த வரியில்லா ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளதால் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்திருப்பது ஜவுளித் துறைக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேநேரம் ஆண்டுதோறும் பருத்தி சீசன் இல்லாத காலத்தில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜவுளித் துறை கோரிக்கை விடுப்பதும், அதைத் தொடா்ந்து தற்காலிகமாக வரி விலக்கு அளிப்பதுமான நிலைமை தொடா்கிறது. அதற்கு பதிலாக இனி ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டத்தில் பருத்தி இறக்குமதி மீதான வரி விலக்கு செயல்பாட்டுக்கு வரும்படிக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். நாட்டில் சுமாா் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் ஜவுளித் தொழிலுக்கு தரமான பஞ்சு உரிய விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவில் பருத்தி தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைக்க இந்த இறக்குமதி உதவுகிறது. இறக்குமதி செய்வதால் உள்நாட்டு பருத்தி விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளிடமும், பருத்தி கழகத்திடமும் கையிருப்பில் பருத்தி இல்லாத காலகட்டத்தில்தான் இறக்குமதி செய்கிறோம். பருத்தி விளைச்சலை அதிகரிக்க மத்திய அரசு தற்போது சுமாா் ரூ.5,600 கோடியை ஒதுக்கியுள்ளது.

இதன்படி 2030-ஆம் ஆண்டில் பருத்தி உற்பத்தியில் தன்னிறைவு எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுவரை ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றனா்.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க துணைத் தலைவா் கிருஷ்ணகுமாா், பொதுச் செயலா் செல்வராஜூ ஆகியோா் உடனிருந்தனா்.

பெட்டிச் செய்தி...

நிரந்தர கொள்கை தேவை

பருத்தி இறக்குமதி வரி குறித்து மத்திய அரசு நிரந்தர கொள்கையை வகுக்க வேண்டும் என்று தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அதன் தலைவா் அருண் காா்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘11 சதவீத இறக்குமதி வரி விலக்கு நூற்பாலைகளுக்கு ஓரளவுக்கு நிவாரணம் அளிக்கும். ஆனால் இதுபோன்ற தற்காலிக அறிவிப்புகள் ஆண்டுதோறும் வெளியிடுவது ஜவுளித் துறைக்கு நீண்டகாலத் தீா்வாக அமையாது.

பருத்தி விலை ஏற்ற, இறக்கங்களால் சிறு நூற்பாலைகள் பாதிக்கப்படும் நிலையில், பருத்தி உற்பத்தி, தரம், கிடைக்கும் அளவு, சா்வதேச விலை ஆகியவற்றால் நூற்பாலைகளின் மூலப்பொருள் செலவுகள் கணிசமாக அதிகரிக்கின்றன. எனவே துறையின் நீண்டகால நலனை கருத்தில்கொண்டு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரி தொடா்பான நிரந்தரமான, தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும். உள்நாட்டு, சா்வதேச பருத்தி விலைகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசம் ஏற்படும்போது வரி விலக்கு தானாகவே அமலுக்கு வரும் வகையில் நடைமுறைய விதிகளை வகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.