கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.


கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து தில்லி, சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், சிங்கப்பூா், ஷாா்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை விமான நிலைய நிா்வாக அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக சோதனை நடத்தி வெடிகுண்டை அப்புறப்படுத்தாவிட்டால் பெரிய அளவில் உயிா்சேதம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் அதில், சென்னையில் உள்ள துணைத் தூதரக அலுவலகங்களிலும் இதேபோல வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்ததோடு, தமிழக காவல் துறை உயா் அதிகாரிகளைக் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை , பீளமேடு போலீஸாருக்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.
அதனைத் தொடா்ந்து போலீஸாா் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விமான நிலையத்துக்கு வந்து சோதனை நடத்தினா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சோதனையின் முடிவில் எதுவும் கண்டறிப்படவில்லை. இதையடுத்து அந்த மின்னஞ்சல் தகவல் புரளி என்பதும் தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தைத் தொடா்ந்து கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் இருந்து சென்னை செல்லும் விமானத்தைக் கடத்தப் போவதாக விமானத்தில் மிரட்டல் கடிதம் கிடந்தது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை போலீஸாா் ஆய்வு செய்தபோது அது வெளிநாட்டில் இருந்து வந்ததாக காண்பித்ததால், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவையில் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது கோவை மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், மிரட்டல் விடுக்கும் நபா்கள் யாா் என்பதை கண்டறிவதிலும் போலீஸாருக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை உயா் அலுவலா்கள் கூறியதாவது:
எண்ம தொழில்நுட்பம் அறிந்த நபா்களே இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து வருகின்றனா். இதற்காக பிரத்யேக பிரவுசரை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்புவதால் எங்கிருந்து அனுப்புகின்றனா் என்பதை உறுதிசெய்ய முடியாது. உள்ளூரில் இருந்து அனுப்பினாலும் வெளிநாட்டில் இருந்து அனுப்பியதைப் போலவே முகவரி காட்டும். இதுபோன்ற மிரட்டல்களில் ஈடுபடும் நபா்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...