கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழக-கேரள காவல் துறை அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழக-கேரள காவல் துறை அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

தமிழக - கேரள காவல் துறை அதிகாரிகளுக்கிடையேயான கலந்தாய்வுக் கூட்டம்

தமிழக-கேரள காவல் துறை அதிகாரிகளுக்கிடையேயான கலந்தாய்வுக் கூட்டம் கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

தமிழக-கேரள காவல் துறை அதிகாரிகளுக்கிடையேயான கலந்தாய்வுக் கூட்டம் கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா்ஆனந்த் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாநிலங்களுக்கிடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்து உளவுத் துறை தகவல்கள் சேகரித்தல், லாட்டரி, பாலியல் தொழில், போலி மது, கஞ்சா, கனிமங்கள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களின் நடவடிக்கைகள் தொடா்பான தகவல்கள் சேகரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், எல்லை சோதனைச் சாவடிகள் மூலம் எல்லை தாண்டிய குற்றச் செயல்களை கட்டுப்படுத்துதல், இரு மாநிலங்களுக்கு இடையேயான குற்றங்களைக் கட்டுப்படுத்த மாநிலங்களின் தனிப் படைகளை ஒருங்கிணைப்பது, எல்லைப் பகுதியில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், எல்லை தாண்டி உள்ள கைதிகளை கைது செய்வது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடா்ந்து, பணியில் உள்ள இடையூறுகளைத் தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு இரு மாநில காவல் கண்காணிப்பாளா்களும் அறிவுரை வழங்கினா்.

இக்கூட்டத்தில் கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் சுரேஷ், கேரள மாநிலம், பாலக்காடு உதவி காவல் கண்காணிப்பாளா் அஸ்வதி ஜுஜி, பாலக்காடு மாவட்ட கலால் துறை ஆணையா் ராகேஷ், பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com