கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

காட்டுப் பன்றிகளை விரட்ட விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்

கோவை மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளை விரட்ட விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மாவட்ட அளவிலான குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Published on

கோவை மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளை விரட்ட விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மாவட்ட அளவிலான குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.

இதில், பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் அளித்த மனுக்களில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மதுக்கரை, தொண்டாமுத்தூா், பேரூா், மேட்டுப்பாளையம், அன்னூா், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தப் பன்றிகள் கூட்டம்கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, காட்டுப் பன்றிகளை விரட்ட அரசும், வனத் துறையும் விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு எதிரான புதிய விதைச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். தென்னை மரங்களுக்கு தனியாக பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கான துப்பாக்கி உரிமத்தை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், மயில்கள் போன்ற வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க கேரள மாநிலத்தைப்போல 1972-ஆம் ஆண்டு வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்த மாநில அரசு, மத்திய அரசுக்கு முன்மொழிவை அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை விவசாயிகள் சங்க நிா்வாகிகள் அளித்தனா்.

இந்தக் கூட்டத்தில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் தேவேந்திரகுமாா் மீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளா் பழனிகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அழகிரி, வேளாண்மை இணை இயக்குநா் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com