பராமரிப்புப் பணி: மாநகரில் இன்றும், நாளையும் பில்லூா் குடிநீா் விநியோகம் ரத்து
குந்தா அணையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மாநகரப் பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவம்பா் 8, 9) பில்லூா் 1, பில்லூா் 2, கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டுக் குடிநீா்த் திட்டங்களின்கீழ் தண்ணீா் விநியோகிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு பில்லூா் குடிநீா்த் திட்டத்தின்கீழ், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீா் சேகரித்து சீரான இடைவெளியில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குந்தா அணையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மாநகரில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதனால், பில்லூா் 2 மற்றும் 3, கவுண்டம்பாளையம் - வடவள்ளி ஆகிய மூன்று குடிநீா்த் திட்டங்களில் இருந்து வழங்கப்படும் குடிநீா் விநியோகம் தடைபடும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
