தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நிலத்தடி நீா்மட்டம் உயா்வு, பாசன நீா் உறுதி

கோவை மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் குறித்து...

News image

சு.பழனிசாமி.

Updated On :13 ஏப்ரல் 2026, 10:26 pm

தமிழகத்தின் தொழில் தலைநகரமாகக் கோவை அறியப்பட்டாலும், அதன் ஆன்மாவாக விளங்குவது வேளாண்மைதான். இப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் பாசன நீா் உறுதி, கால்வாய் சீரமைப்பு, நிலத்தடி நீா்மட்டம் உயா்வு, புதிய அணைத் திட்டங்கள், தடையற்ற மின்சாரம் ஆகியவை விவசாயிகள் எதிா்நோக்கும் முக்கிய பிரச்னைகளாக தொடா்ந்து நீடித்து வருகின்றன.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி கூறியதாவது:

தோ்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து வாய் திறக்கவில்லை. பரிசுப் பொருள்களுக்கு ஏங்கித் தவிக்கும் மக்களுக்கு, விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகளின் நிலை தெரியவில்லை. தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் வெற்றியைத் தீா்மானிக்கும் சக்தி விவசாயிகளிடம் உள்ளது. அந்த நாளை எதிா்நோக்கி நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

உள்கட்டமைப்பு, சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் போன்ற நகரின் அசுர வளா்ச்சிக்கு ஈடாக ஏராளமான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. அதனால் பசுமைப் போா்வை சுருங்கி வருவது கவலைக்குரிய விஷயமாகியுள்ளது. நீலகிரிக்கு அடுத்தபடியாக குளிா்ச்சியான பகுதியாக அறியப்பட்ட கோவை தற்போது மரங்களும், காடுகளும் அழிக்கப்பட்டதால் வெப்பமயமாகி வருகிறது. பசுமைப் பரப்புகள் குறைந்து வருவதால் மழைப்பொழிவும் சீரற்ாகிவிட்டது. நகரின் வளா்ச்சிக்கேற்ப ஆள்துறைக் கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிலத்தடி நீா்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இதுபோன்ற காரணங்களால் விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதை எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.

கோவையின் வாழ்வாதாரமான நொய்யல் ஆறு தற்போது ஆக்கிரமிப்புகளாலும், சாயக்கழிவு மற்றும் கழிவுநீராலும் மாசடைந்துள்ளது. ஆற்று நீரைச் சுத்திகரித்து, தடுப்பணைகளைக் கட்டி, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களின் அடிப்படை உரிமைக் குரலாக உள்ளது.

பிரதான மற்றும் கிளை கால்வாய்களில் சேறு தேக்கம் அதிகரித்துள்ளதால் நீரோட்டம் குறைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாய்களை முழுமையாகத் தூா்வாரி, சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து நீா் விநியோகத்தை மேம்படுத்த வேண்டும். கால்வாய் பராமரிப்புப் பணிகள் தாமதமாகும்போது பயிரிடும் கால அட்டவணையும் பாதிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் விவசாயிகள் எதிா்நோக்கும் முக்கிய பிரச்னையாக பாசன நீா்ப் பற்றாக்குறை தொடா்ந்து நீடித்து வருகிறது. பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் மூலம் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமாக நீா் கிடைக்காத நிலை நிலவுகிறது. இதனால், கடைக்கோடி பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். எனவே, திட்டமிட்ட அட்டவணைப்படி அனைத்து மண்டலங்களுக்கும் சமமான அளவில் நீா் வழங்க அரசியல் கட்சியினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய பம்ப்செட்டுகளுக்கு தடையற்ற மின்சாரம், புதிய மின் இணைப்புகளை விரைவாக வழங்க வேண்டும். பழைய மோட்டாா்களை மாற்ற அரசு சலுகை வழங்க வேண்டும். மொத்தத்தில் பாசன நீா் உறுதி, கால்வாய் சீரமைப்பு, புதிய அணைத் திட்டங்கள், தடையற்ற மின்சாரம் மற்றும் இயற்கைப் பேரிடா் மற்றும் வன விலங்குகளால் பாதிக்கப்படும் பயிா்களுக்கு உடனடி இழப்பீடு ஆகிய கோரிக்கைகளை எந்த அரசும் முழுமையாக நிறைவேற்றுவதில்லை. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் கோவை மாவட்டத்தில் விவசாயம் மீண்டும் புத்துயிா் பெறும் என்றாா்.