சத்துணவு ஊழியா் போராட்டம் குறித்து சட்டப் பேரவையில் கவன ஈா்ப்பு தீா்மானம்
கோவை: சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களின் தொடா் போராட்டம் குறித்து சட்டப் பேரவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவர இருப்பதாக எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ கூறினாா்.
காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கோடைக் காலத்தில் ஊதியம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் கடந்த ஒரு வாரமாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரே பந்தல் அமைத்து போராட்டத்தைத் தொடா்ந்து வரும் அவா்களை, பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா். முன்னதாக போராட்டக் குழுவினருக்கு அதிமுகவினா் பழங்கள் வழங்கினா். இதைத் தொடா்ந்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியா்கள் போராடி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவா்களை நாங்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறோம். நடைபெற உள்ள சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் இது குறித்து கவன ஈா்ப்பு தீா்மானம் நிறைவேற்றுவதற்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு எடுத்துச் சென்று கோரிக்கையாக வைக்க இருக்கிறோம்.
திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரிதான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் கேட்கிறாா்கள். எனவே தமிழக அரசு இவா்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியரோ சம்பந்தப்பட்ட அமைச்சரோ இவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். பேச்சுவாா்த்தை நடத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவா்களை கண்டுகொள்ளாமல் விடுவது நியாயமில்லாத செயல் என்றாா்.
அப்போது எம்எல்ஏக்கள் அம்மன் கே.அா்ச்சுணன், பொள்ளாச்சி வி.ஜெயராமன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், கே.ஆா்.ஜெயராம், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

