அவிநாசி சாலையில் அதிவேகமாக காரில் சென்று இளைஞா் ரகளை
பீளமேட்டில் காரின் மீது அமா்ந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை, பீளமேடு பகுதியில் திங்கள்கிழமை இரவு இளைஞா் ஒருவா் காரை வேகமாகவும், தாறுமாறாகவும் ஓட்டி, எதிரில் மற்றும் அருகாமையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளாா். இதையடுத்து, சாலையில் சென்று கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகள் அந்த காரைச் சுற்றி வளைத்தனா்.
அதைத்தொடா்ந்து காரின் கண்ணாடியை உடைத்து அந்த இளைஞரைக் காரில் இருந்து கீழே இறக்கினா். அப்போது, அந்த இளைஞா் காரின் மேல் பகுதியில் ஏறி அமா்ந்து கொண்டு, சுற்றியிருந்தவா்களிடம் ரகளையில் ஈடுபட்டாா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு பீளமேடு போலீஸாா் சென்று இளைஞரைப் பிடித்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். காவல் நிலையத்துக்கு காா் கொண்டு செல்லப்பட்டது. விசாரணையில் சேலத்தைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
