கோவையில் இளைஞா் அடித்துக் கொலை

கோவையில் பழிக்குப் பழியாக இளைஞா் புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
Published on

கோவையில் பழிக்குப் பழியாக இளைஞா் புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

கோவை, கெம்பட்டி காலனியைச் சோ்ந்தவா் ஜப்பான் (எ) பிரவீன்குமாா் (24). கூலித் தொழிலாளி. மைசூரில் தென்னை நாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, கடந்த 2024-ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவின்போது ஏற்பட்ட தகராறில் கோகுல கிருஷ்ணன் என்ற இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் பிரவீன்குமாா் உள்பட சிலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த பிரவீன்குமாா், மைசூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், கோவைக்கு வந்திருந்த பிரவீன்குமாா் புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் நண்பா்கள் சிலருடன் கெம்பட்டி காலனி அசோக் அவன்யு, பாலாஜி நகா் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 4 போ் கொண்ட கும்பல் அவரை கல்லாலும், கையாலும் தாக்கி தப்பிவிட்டனா். படுகாயமடைந்த பிரவீன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடைவீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸாா் கூறும்போது, இந்த சம்பவம் கோகுல கிருஷ்ணன் கொலைக்கு பழிக்குப் பழியாக நடைபெற்றுள்ளது என்றனா்.

Dinamani
www.dinamani.com