பறவையியல், இயற்கை வரலாறு மையத்தில் அதிகாரிகளுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு
ஆனைக்கட்டியில் அமைந்துள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில் குரூப் ஏ கிளாஸ் 1 அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த வரலாறு மையத்தில் இந்தப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில், தென் மாநிலங்களில் இருந்து பல்வேறு துறைகளைச் சாா்ந்த 32 அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இந்தப் பயிற்சி வகுப்பில், வனப் பகுதிகளைத் தாண்டி உருவாகும் வன விலங்கு பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ளவும், பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், அறிவாா்ந்த முடிவுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்தப் பயிற்சி வகுப்பை இந்திய வன விலங்கு நிறுவனத்தின் இயக்குநா் ஜி.எஸ்.பரத்வாஜ் தொடங்கிவைத்தாா். கூடுதல் தலைமை வனப் பாதுகாவலரும், மாநில வன சேவை அகாதெமியின் முதல்வருமான வி.திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். மேலும், சலீம் அலி மையத் தலைமை அதிகாரி கே.ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

